TNPSC Group 1: க்ரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
TNPSC Group 1 Exam Result: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

TNPSC Group 1 Exam Result: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்து தேர்வு தொடங்கி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
டிஎன்பிஎஸ்சி க்ரூப் -1 தேர்வு முடிவுகள்:
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பிரபாகர் ஐஏஎஸ், “ க்ரூப்-1 பணியிடங்களுக்காக இன்று நடைபெறும் முதல்நிலை தேர்வு முடிவுகள் அடுத்த இரண்டு மாதங்களில் எதேனும் ஒருநாளில் வெளியாகும். இந்த தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த மூன்று மாதங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு நடைபெறும். இந்த தேர்வின் மூலம் 72 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதில் மாவட்ட துணை கலெக்டர் பதவிக்கு 28 பேர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிக்கு 7 பேர், வணிகவரி உதவி ஆணையர் 19 பேர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் பதவிக்கு 7 பேர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பதவிக்கு 3 பேர், மற்றும் தொழிலாளர் நல உதவி ஆணையர் பதவிக்கு 6 பேர், உதவி வனப் பாதுகாவலர் 2 பேர் அடங்குவர்.
12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டில் 10 ஆயிரத்து 701 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளது. நடப்பாண்டில் ஜனவரி தொடங்கி தற்போது வரை ஏறக்குறைய 10 ஆயிரத்து 227 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளது. தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்வுகள், இனி நடைபெற உள்ள தேர்வுகள் மூலம், இன்னும் சுமார் 12 ஆயிரத்து 237 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வாய்ப்புள்ளது. திட்டமிட்ட அனைத்து தேர்வுகளையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெற்றிகரமாக நடத்தி, குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடிவுகளையும் வெளியிட்டு வருகிறது” என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.
எளிமைப்படுத்தப்பட்ட ஓஎமார் ஷீட்கள்:
தொடர்ந்து பேசுகையில், “இன்றைய தேர்வில் எளிமைப்படுத்தப்பட்ட ஓஎம்ஆர் ஷீட்டை அறிமுகப்படுத்தியுள்ளோம். பழைய ஷீட்டில் இருந்த வழிகாட்டு நெறிமுறைகள் சற்று கடினமானதாக இருந்தது. அதனை இந்த முறை எளிதாக்கி மாணவர்கள் எளிதாக பதிலளிக்க ஏதுவாக புதிய ஷீட்டை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது பயனுள்ள முயற்சியாக இருக்கும் என நான் கருதுகிறேன்.இதனால் மாணவர்களின் நேர விரயம் மற்றும் மன உளைச்சல் குறையும். 95 ஆண்டுகால வரலாறு கொண்ட டிஎன்பிஎஸ்சி ஒவ்வொரு முறை தேர்வு நடத்தும்போது கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில் பல முன்னேற்றங்களை செய்து வருகிறோம். மாணவர்களின் கருத்துகளை உள்வாங்கி பாடத்திட்டங்களையும் மாற்றி வருகிறோம். தனித்தனியாக நடந்து வந்த தேர்வுகளை ஒருங்கிணைத்து, தற்போது 7 தேர்வுகளை மட்டுமே நடத்தி வருகிறோம். இதனால் மாணவர்களுக்கு விண்ணப்பிப்பது எளிதாகியுள்ளது. இதனால் பல தேர்வுகளுக்கு விண்ணப்பித்து எழுதுவது, விண்ணப்பக் கட்டணம் போன்ற பிரச்னைகள் குறைந்துள்ளன” என டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.





















