SI Notification 2025: தமிழ்நாடு அரசில் வேலை - 1,299 காலிப்பணியிடங்கள், ரூ.1.16 லட்சம் ஊதியம், தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி?
TNUSRB SI Notification 2025: தமிழ்நாடு காவல்துறையில் ஆயிரத்து 299 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TNUSRB SI Notification 2025: தமிழ்நாடு காவல்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? என்ற தகவல்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல் சார்பு ஆய்வாளர்கள் ( தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கான விண்ணப்பங்களை கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரம் 7ம் தேதி தொடங்கி மே மாதம் 3ம் தேதி வரை தகுதியுள்ள மற்றும் ஆர்வமான நபர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிட விவரங்கள்:
மொத்தமாக ஆயிரத்து 299 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் காவல் சார்பு ஆய்வாளர்கள் ( தாலுகா) பிரிவில் ஆண்களுக்கு 654 மற்றும் பெண்களுக்கு 279 என மொத்தம் 933 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல காவல் சார்பு ஆய்வாளர்கள் (ஆயுதப்படை) பிரிவில் ஆண்களுக்கு 255 மற்றும் பெண்களுக்கு 11 என மொத்தம் 366 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஆண்களுக்கு 909 பணியிடங்களும், பெண்களுக்கு 390 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுபோக, SC/ST பிரிவினருக்கு என தனியாக 53 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதர விவரங்கள்
ஊதியம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 36 ஆயிரத்து 900 ரூபாயில் தொடங்கி, ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 600 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.07.2025ன்படி 20 வயது நிறைவுற்றவராகவும், 30 வயது நிறைவடையாதவராகவும் இருக்க வேண்டும். வயது உச்சவரம்பு வகுப்பு/ பிரிவுகளுக்கு ஏற்ப மாறுபடும்.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு இளங்கலைப்பட்டம்
தேர்வு: தமிழ் மொழி தகுதித்தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.
விண்ணப்பதாரர்களுக்கான உடல் தகுதி
ஆண்களின் உயரம் 170 சென்டி மீட்டரும், பெண்களின் உயரம் 159 சென்டி மீட்டரும் இருக்க வேண்டும். ஆண்களுக்கான மார்பளவு குறைந்த அளவு 81 செ.மீ. மூச்சு உள்ளிழுக்கப்பட்ட நிலையில் 5 செ.மீ. விரிவடைந்த நிலையில் குறைந்த அளவு 86 செ.மீ. இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கும், மேற்கொண்டு தகவல் அறிவதற்கும் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.
இடஒதுக்கீடு:
துறை ஒதுக்கீட்டில் தாலுகா மற்றும் ஆயுத படையில் தலா 20% காலி பணியிடங்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்படுகிறது. வாரிசுதாரருக்கான ஒதுக்கீடு மீதமுள்ள 80% காலிப்பணியிடங்களில் 10% (9% +1%) வழங்கப்படுகிறது. விளையாட்டு ஒதுக்கீடு மீதமுள்ள 80% காலிப்பணியிடங்களில் 10% (7% + 3%) வழங்கப்படுகிறது.
வகுப்புவாரி இடஒதுக்கீடு:
தற்போதுள்ள விதிகளின்படி வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் சதவிகிதம், பற்றாக்குறை காலிபணியிடங்களைத் தவிர அனைத்து பதவிகளுக்கு பொருந்தும்.
தேர்வு விவரம்:
1. தமிழ் மொழி தகுதித்தேர்வு
2. முதன்மை எழுத்துத் தேர்வு
- சான்றிதழ் சரிபார்த்தல்
- உடற்கூறு அளத்தல் தேர்வு
- உடற்தகுதித் தேர்வு
- உடல்திறன் போட்டி
3. நேர்முகத்தேர்வு
மதிப்பெண்கள் ஒதுக்கீடு:
| வ.எண் | விவரம் | பொது | துறை ஒதுக்கீடு |
|---|---|---|---|
| 1. | எழுத்துத் தேர்வு | 70 மதிப்பெண்கள் | 85 மதிப்பெண்கள் |
| 2. | உடல்திறன் தேர்வு | 15 மதிப்பெண்கள் | விலக்கு அளிக்கப்பட்டது |
| 3. | நேர்முகத்தேர்வு | 10 மதிப்பெண்கள் | 10 மதிப்பெண்கள் |
| 4. | சிறப்பு மதிப்பெண்கள் | 05 மதிப்பெண்கள் | 05 மதிப்பெண்கள் |
| மொத்தம் | 100 மதிப்பெண்கள் | 100 மதிப்பெண்கள் | |
கூடுதல் விவரங்களுக்கு TNUSRB இணையதள முகவரியை அணுகுங்கள்.





















