TN Govt Jobs | தமிழ் எழுத, படிக்கத் தெரிந்தாலே அரசுப்பணியா?அரசாணை சொல்வது என்ன? முழு விவரம்!
அரசுப் பணியில் சேர தமிழ் எழுத, படிக்கத் தெரிந்து, 40 மதிப்பெண்கள் பெற்றால் போதும், எளிதில் தேர்ச்சி பெறலாம் என்று சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்பட்டு வருகிறது. ஆனால் அரசாணை சொல்வது வேறு.
தமிழ்நாட்டில் அனைத்து வகை அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கும் தமிழ் மொழியில் இனி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் அதிக அளவில் அரசு வேலைகளில் இணைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரையில், தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் சேரத் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து அவர் ஆட்சிக்கு வந்தபின்னர், அரசு வேலையில் சேரத் தமிழ் மொழி கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இதற்கான அரசாணை வெளியாகியுள்ளது. அதில் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டுமல்லாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) ஆகிய துறைசார் தேர்வு முகமைகளில் தேர்வாக தமிழ் மொழிதகுதித் தேர்வு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதித் தேர்வை நடத்துவது குறித்த வழிபாட்டு நெறிமுறைகள், விரைவில் சம்மந்தப்பட்ட நிர்வாகத் துறைகளால் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியில் சேர தமிழ் எழுத, படிக்கத் தெரிந்தால் போதும். 40 மதிப்பெண்கள் பெற்றால் போதும், எளிதில் தேர்ச்சி பெறலாம் என்று சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழ்நாடு அரசாணை சொல்வது வேறு. அதன்படி, குரூப் 1, 2, 2 ஏ தேர்வுகளுக்குத் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயம். இந்தத் தேர்வு கொள்குறி வகையில் இருக்காமல், விரிவாக எழுதும் வகையில் இருக்கும். இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.
அதேநேரத்தில் குரூப் 3, 4 தேர்வுகளுக்கு ஒருசேர தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாகவும் இருக்கும். பிற தேர்வுகளுக்கு, தமிழ் மொழித் தேர்வு தகுதித் தேர்வாக மட்டும் இருக்கும். இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும்.
குரூப் 1, 2, 2 ஏ உள்ளிட்ட இரண்டு நிலைத் தேர்வுகள் (Two Stage Examination)
* முதல்நிலைத் தேர்வில் வழக்கம்போல் 200 கேள்விகள் இடம்பெறும்.
* முதன்மைத் தேர்வில் மட்டும் தகுதித் தேர்வாக தமிழ் மொழிப்பாடம் இருக்கும்.
குரூப் 3, 4 தேர்வுகள்
* பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டுள்ளது.
* தமிழ் மொழிப்பாடத்தில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு பகுதியில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். இதில் தமிழ் பாடம் ஒருசேர தகுதித் தேர்வாகவும், மதிப்பீட்டுத் தேர்வாகவும் இருக்கும். அதாவது தேர்ச்சிக்குத் தமிழ் மொழித் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.
ஒரே நிலை (Single Stage Examination) கொண்ட பிற தேர்வுகள்
ஒரே நிலை கொண்ட சிறப்பு வகைத் தேர்வுகளில் பொதுத் தமிழ்/ பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் ஆங்கிலத் தாள் நீக்கப்பட்டுள்ளது. தமிழ் தகுதித் தேர்வாக மட்டுமே 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும்.