RRB Group D: ரயில்வேயில் 22,000 வேலைவாய்ப்பு: இளைஞர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்- விண்ணப்ப தேதி மாற்றம்! RRB அறிவிப்பு
RRB Group D 2026 Registration: ஜனவரி 21ஆம் தேதி தொடங்கவிருந்த ரயில்வே குரூப் டி பணியிடங்களுக்கானபதிவு, தற்போது ஜனவரி 31, 2026 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ரயில்வே துறையில் காலியாக உள்ள சுமார் 22,000 குரூப் டி (Group D) பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவுத் தேதியை ரயில்வே தேர்வு வாரியம் (RRB) திடீரென மாற்றியுள்ளது.
முன்னதாக ஜனவரி 21ஆம் தேதி தொடங்கவிருந்த இந்தப் பதிவு, தற்போது மாற்றியமைக்கப்பட்டு ஜனவரி 31, 2026 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்தத் தேதி மாற்றம் கூடுதல் கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மார்ச் 2, 2026 இரவு 11:59 மணி கடைசி நாளாகும்.
பணியிடங்கள் மற்றும் சம்பளம்
மொத்தம் உள்ள 22,000 பணியிடங்களில் பெரும்பாலானவை பொறியியல் துறையைச் சார்ந்த 'டிராக் மெயின்டெய்னர் கிரேடு IV' (Track Maintainer Grade IV) போன்ற பதவிகளாகும். தேர்வாகும் நபர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின்படி (Level 1) ஆரம்ப அடிப்படைச் சம்பளமாக மாதம் ரூ. 18,000 வழங்கப்படும்.
வயது வரம்பு
ஜனவரி 1, 2026 அன்று விண்ணப்பதாரர்கள் 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி, ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு மற்றும் கட்டணம்
தேர்வு நடைமுறையானது கணினி வழித் தேர்வு (CBT) மற்றும் உடற்தகுதித் தேர்வு (PET) என இரண்டு கட்டங்களாக நடைபெறும். பொது, ஓபிசி மற்றும் இ.டபிள்யூ.எஸ் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். இதில் முதல் நிலைத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ரூ. 400 கட்டணம் திருப்பித் தரப்படும்.
முக்கியக் குறிப்பு
ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தால் அவை நிராகரிக்கப்படும். ஆனால், ஒரே விண்ணப்பத்தில் தகுதிக்கேற்ப பல பதவிகளைத் தேர்வு செய்துகொள்ளலாம். கல்வித் தகுதி (ITI அல்லது 10-ஆம் வகுப்பு) குறித்த கூடுதல் விவரங்களுக்கு ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் புகைப்படம் ஆகியவை 10-ஆம் வகுப்புச் சான்றிதழில் உள்ள விவரங்களுடன் ஒத்துப்போவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் முன்கூட்டியே புதுப்பித்துக் கொள்வது நல்லது.






















