காவல்துறையில் வேலை வேண்டுமா..? மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு..!
மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்களுக்காக, இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தவுள்ள 3,352 காவல் சார்பு ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்களுக்காக, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது என என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார்.
காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு அறிவிப்பு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது, மொத்தம் 3,352 காவல் சார்பு ஆய்வாளர் (Sub-Inspector of Police) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை ஏற்கனவே பெற்றுள்ளது. இத்தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
புதிய தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம்
இந்த ஆண்டு TNUSRB தேர்வில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, முன்பு பொது ஒதுக்கீடு மற்றும் துறை ஒதுக்கீட்டிற்கு எனத் தனித்தனியே நடத்தப்பட்டு வந்த எழுத்துத் தேர்வானது, தற்போது பொதுப் பிரிவினர் மற்றும் துறைப் பிரிவினர் இருவருக்கும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்தப்பட உள்ளது.
தேர்வானது பின்வரும் பிரிவுகளைக் கொண்டிருக்கும்
- பொது அறிவு மற்றும் சைக்காலஜி: இதில் பொது அறிவுப் பிரிவில் 80 கேள்விகளும், சைக்காலஜி (உளவியல்) பிரிவில் 60 கேள்விகளும் என மொத்தம் 140 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு 70 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- தமிழ் தகுதித் தேர்வு: இது முழுக்க முழுக்கத் தமிழ் மொழியின் தகுதியைச் சோதிக்கும் வகையில் 100 மதிப்பெண்களுக்காக நடத்தப்பட உள்ளது. இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.
இந்த மாற்றங்களை மனதில் வைத்து, தேர்வுக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்களின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் இம்முயற்சியை எடுத்துள்ளது.
இலவச மாதிரித் தேர்வுகள் திட்டம்
உத்தேசமாக டிசம்பர் 2025-இல் நடைபெறவுள்ள இந்த எழுத்துத் தேர்விற்குத் தயாராகும் விண்ணப்பதாரர்கள், புதிய தேர்வு முறையின் கீழ் பயிற்சி பெறுவது மிகவும் அவசியமாகும். இதனை கருத்தில் கொண்டு, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாகச் செயல்பட்டு வரும் தன்னார்வப் பயிலும் வட்டத்தில் இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இலவச மாதிரித் தேர்வுகளின் மூலம், தேர்வர்கள் தங்களின் தயாரிப்பு நிலையைச் சரிபார்த்துக் கொள்ளவும், புதிய தேர்வு முறையைப் புரிந்துகொள்ளவும், நேர நிர்வாகத் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும்.
விண்ணப்பிக்கும் முறை
இலவச மாதிரித் தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பமும் தகுதியும் உள்ள தேர்வர்கள், பின்வரும் ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் அணுகிப் பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.
* பாஸ்போர்ட் அளவுப் புகைப்படம்.
* ஆதார் அட்டை நகல்.
பதிவு செய்யும் நாட்கள் மற்றும் நேரம்
தேர்வர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 10 மணிக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
முகவரி
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், 2வது தெரு, பாலாஜி நகர், கால் டாக்ஸி பெட்ரோல் பங்கிலிருந்து பூம்புகார் செல்லும் வழி,ம யிலாடுதுறை.
மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்
பதிவு செய்து கொள்ள விரும்பும் தேர்வர்கள், 9499055904 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, காவல் சார்பு ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.






















