Amazon Layoffs: அமேசான் அடித்த ஆப்பு - 14,000 மேனேஜர்களை பணிநீக்கம் செய்ய முடிவு, காரணம் என்ன?
Amazon Layoffs: அமேசான் நிறுவனம் 2025ம் ஆண்டுக்குள், 14 ஆயிரம் மேனேஜர் பணியிடங்களை காலி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Amazon Layoffs: அமேசானின் பணிநீக்கம் தொடர்பான தகவலால், அந்நிறுவன ஊழியர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
14,000 மேனேஜர்களை பணிநீக்கம் செய்ய முடிவு:
மார்கன் ஸ்டான்லி நிறுவன அறிக்கையின்படி, ஆண்டுதோறும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமிக்கும் முயற்சியில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 14,000 மேலாளர் பதவிகளை குறைக்க Amazon திட்டமிட்டுள்ளது. மார்ச் 2025 க்குள் மேலாளர்களுக்கான தனிப்பட்ட பங்களிப்பாளர்களின் விகிதத்தை குறைந்தபட்சம் 15 சதவிகிதம் அதிகரிப்பதன் மூலம், நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிக்க வேண்டும் என்ற, தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸியின் உத்தியின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களின் இந்த முயற்சி, முடிவெடுப்பதை ஒழுங்குபடுத்துவதற்கும், அதிகாரத்துவ தடைகளை அகற்றுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
3 பில்லியன் டாலர்கள் சேமிப்பு
இந்த வேலைக் குறைப்பு அமேசானின் நிர்வாகப் பணியாளர்களை, உலகளவில் தோராயமாக 105,770 இலிருந்து 91,936 ஆகக் குறைக்கலாம் என்று மார்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் ஒரு மேலாளருக்கான மதிப்பிடப்பட்ட வருடாந்திர செலவு $200,000 முதல் $350,000 வரை இருக்கும். இந்நிலையில் மேற்கொள்ளப்படும் பணி நீக்க நடவடிக்கையால், ஆண்டிற்கு சுமார் $2.1 பில்லியன்முதல் $3.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அமேசான் நிறுவனத்தின் செலவு மிச்சமாகும். இது 2025 ஆம் ஆண்டிற்கான அமேசானின் திட்டமிடப்பட்ட செயல்பாட்டு லாபத்தில் 3 சதவிகிதம் முதல் 5 சதவிகிதம் வரை இருக்கும்.
செயல்திறனை அதிகரிக்க நடவடிக்கை
அமேசான் தனது நிர்வாகத் தரவரிசைகளின் சமீபத்திய விரிவாக்கத்தை ஒப்புக்கொண்டாலும், குழு அமைப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டாலும், பணிநீக்க நடவடிக்கை தொடர்பான தகவலை எங்கும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் மேற்கொள்ளப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கை மறுசீரமைப்பு செயல்பாடுகளை நெறிப்படுத்துவதையும், அதிகாரத்துவ தடைகளை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கை அமேசானுக்கு சாதகமாக இருக்கும் என மோர்கன் ஸ்டான்லி நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, "அடுக்குகளை அகற்றுதல், குறைவான மேலாளர்களுடன் செயல்படுதல் மற்றும் நிறுவனத்தை சமன் செய்தல் ஆகியவை வேகமாக நகர்வதில் கவனம் செலுத்துகின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி, அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து ஊழியர்கள் முழுநேர பணிக்கு அலுவலகத்திற்குத் திரும்ப வேண்டும் என்று அறிவித்ததுள்ளார். அதாவது வீட்டிலிருந்தே வேலை செய்யும் வாய்ப்பு இனி தொடராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, தொழில்நுட்பத் துறையானது கடினமான காலங்களை எதிர்கொள்வதால், அமேசான் நிறுவனம் ஏற்கனவே இந்த ஆண்டு பல சுற்று பணிநீக்கங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.