Drinking Water: ஒரு நாளில் இத்தனை லிட்டர் நீர் குடிப்பது அநாவசியம்.. இந்த அளவே போதுமானது - புதிய அறிக்கை
உடலை ஆரோக்கியமாக பேணி காக்க தினசரி 2 லிட்டர் தண்ணீர் அவசியம் என்பது தவறு என, புதியதாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்களின் பரிந்துரையையும் கடந்து, ஆரோக்கியமான வாழ்கைக்கு மனிதன் ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும் என பரவலாக நம்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் 2 லிட்டர் அல்லது 8 கிளாஸ் தண்ணீரை தினசரி பருகுவது, மனிதனுக்கு அவசியமா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள அபர்தீன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள ஜான் ஸ்பீக்மேன் தலைமையிலான ஆய்வாளர்கள், மனிதர்களுக்கு ஒரு நாளைக்கான தண்ணீர் தேவை பற்றிய ஆய்வை மேற்கொண்டனர்.
அதில், 23 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 5,604 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில், பிறந்து 8 நாட்களேயான குழந்தை முதல் 96 வயது வரையிலான முதியவர்கள் வரை அடங்குவர்.
தினசரி 2 லிட்டர் நீர் அவசியமா?:
ஒரு கிளாஸ் தண்ணீரை அருந்தியதும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு மனித உடலில் இயற்கையாகக் காணப்படும் மற்றும் முற்றிலும் பாதிப்பில்லாத டியூட்டிரியம் எனப்படும் தனிமத்தின் நிலையான ஐசோடோப்பால் சில ஹைட்ரஜன் மூலக்கூறுகள் மாற்றப்படுவது குறித்து அய்வு செய்யப்பட்டது. கூடுதல் டியூட்டீரியத்தை அகற்றும் விகிதம், உடலில் உள்ள நீர் எவ்வளவு விரைவாக மாற்றமடைகிறது என்பதைக் காட்டுகிறது. அதோடு தண்ணீர் மாறும் விகிதம் வேகமாக இருப்பவர்கள் அதிக தண்ணீரை குடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும், மனிதன் நாளொன்றுக்கு 2 லிட்டர் நீரை பருக வேண்டிய அவசியம் இல்லை எனவும், நாளொன்றுக்கு ஒருவருக்கு 1.5 முதல் 1.8 லிட்டர் தண்ணீரே போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு அதிக தண்ணீர் தேவை?:
வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழலில் வாழும் மக்களுக்கும், அதிக உயரத்தில் வாழும் மக்களுக்கும், விளையாட்டு வீரர்கள் மற்றும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கும் உடலில் தண்ணீரின் மாறுபாடு வேகமாக இருப்பதால் அவர்களுக்கு அதிக தண்ணீர் தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வின்படி, 20-35 வயதுடைய ஆண்களின் உடல் சராசரியாக ஒரு நாளைக்கு 4.2 லிட்டர் தண்னீரையும், 20-40 வயதுடைய பெண்களின் உடல் 3.3 லிட்டர் தண்ணீரையும் மாற்றமடைய செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீருக்கான மாற்று ஆதாரங்கள்:
இதற்காக குறிப்பிட்ட அளவிலான தண்ணீரை மனிதன் குடிக்க வேண்டியது இல்லை எனவும், வளர்சிதை மாற்றம், உண்ணும் உணவு ஆகியவற்றில் இருந்தும் உடலுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தேவை எப்படி கணக்கிடப்படுகிறது?:
ஆய்வு முடிவுகள் தொடர்பாக பேசிய பேராசிரியர் ஜான், மனிதன் குடிக்க வேண்டிய தண்ணீர் அளவு என்பது, எடுத்து கொள்ளும் மொத்த தண்ணீர் அளவுக்கும், உணவின் வழியே நமக்கு கிடைக்கும் தண்ணீர் அளவுக்கும் உள்ள வேறுபாடே ஆகும். இந்த ஆய்வில், மக்களின் உணவு அளவு அவர்களிடமே கேட்டு பெறப்பட்டது. ஏனெனில், எவ்வளவு சாப்பிடுகிறோம் என சிலர் உண்மையை கூறுவதில்லை. அதனால், தவறான மதிப்பீடு ஏற்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, தேவையான தண்ணீரின் அளவும் கூடுதலாக இருக்க வேண்டும் என நாம் தவறாக மதிப்பீடு செய்ய வழி ஏற்படுகிறது. நாம் உண்ணும் பல வகை உணவிலேயே தண்ணீர் கலந்துள்ளது. அதனால், சாப்பிடும்போதே அதிக அளவிலான தண்ணீர் எடுத்து கொள்ளப்படுகிறது. இதனால், தண்ணீர் குடிப்பது என்பது ஒவ்வொருவருக்கும் அவரது தேவைக்கு ஏற்ப மாறுபடுவது ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது என கூறினார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )