பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து உறுதியான கொரோனா தொற்று.. அச்சத்தில் பெற்றோர்
அடுத்தடுத்து மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கும், ஆண்டிமடம் தென்னூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதற்கிடையில் அரியலூரில் கொரோனா தொற்று பரவிய அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நேற்று நோய்த்தொற்று உறுதியானது. அந்த மாணவியும் இப்போது அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவல் பரவி உடன் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்கள் மகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் இதையடுத்து அந்த பள்ளியில் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு அறைகள் மூடப்பட்டன
இதேபோன்று தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி மேலையூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு, நேற்று முன்தினம் காய்ச்சல் மற்றும் சளி இருந்ததால் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் நோய்த்தொற்று பரிசோதனை செய்துள்ளனர், மற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த மாணவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பரிசோதனை முடிவில் மாணவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக சுகாதாரத் துறை மூலம் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ,மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் பரிசோதனை செய்யப்பட்டு, பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
தமிழக அரசு பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி பள்ளிகள் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், முகக்கவசங்கள் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வகுப்பு அறைகள் அமைத்திருக்க வேண்டும், ஒவ்வொரு வகுப்பறைகளிலும் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும், குறிப்பாக ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பு ஊசிகளை செலுத்திகொண்டு இருக்க வேண்டும் அதே போன்று 18 வயதிற்கு மேல் உள்ள மாணவர்களும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளவேண்டும் என அரசு தெரிவித்திருந்தது.
தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களின் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் அந்த வகுப்பறை முழுவதும் கிருமி நாசினி தெளித்து தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்றார். மேலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும், மாணவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை பள்ளி வளாகம் உருவாக்கித் தர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அரசு கூறிய விதிகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட்டு வருகிறதா, மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளதா ,என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அடுத்தடுத்து மாணவர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால் ஏற்கனவே செயல்பட்டு வரும் பிற பள்ளிகளில் கண்காணிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.