Omicron | ஒமிக்ரான் அதிவேகத்தில் பரவும்.. தயாராய் இருங்கள் - எச்சரிக்கை மணியடிக்கும் தலைமை விஞ்ஞானி..
ஒமிக்ரான் பரவும் வேகம் அதிகம் என்பதால் திடீரென தேவைப்படும் மருத்துவ உதவி இந்தியாவுக்கு பெரிய சவாலானதாக இருக்குமென WHO தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் வைரஸ்() தொற்று உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. இந்தியாவிலும் ஓமிக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இன்றைய நிலவரப்படி (டிச.27) 578 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் (142), மகாராஷ்டிராவில் (141), கேரளாவில் (57), குஜராத்தில் (49), தெலங்கானா (41), தமிழ்நாடு (34), கர்நாடகா (31) மற்றும் ராஜஸ்தானில் (43) பேருக்கு தொற்று உள்ளது.
டெல்லி, உத்தரப்பிரதேசம், அசாம், கர்நாடகா எனப் பல்வேறு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் ஒமிக்ரான் பரவும் வேகம் அதிகம் என்பதால் திடீரென தேவைப்படும் மருத்துவ உதவி இந்தியாவுக்கு பெரிய சவாலானதாக இருக்குமென WHO தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். ஒமிக்ரானின் எழுச்சி மிக வேகம் என்றும், பலர் நோய்வாய்ப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், ஒமிக்ரானின் பரவும் வேகமும், மாறுபாடும் உலகளவில் பாதிப்புகளை அதிகரித்துள்ளது. திடீரென அதிகரிக்கும் பாதிப்பு ஒரு எச்சரிக்கை மணியை அடித்துச் சொல்கிறது. மக்கள் கவலையில் இருக்கிறார்கள். உங்களுக்கு அறிகுறிகள் இல்லை என்றாலும், மருத்துவர்களிடம் ஆலோசனை பெற மக்கள் விரும்புவார்கள். ஏதாவது ஒரு மருத்துவம் சார்ந்த ஊழியரின் ஆலோசனை தேவைப்படும். அதற்கு அரசு தயாராக இருக்க வேண்டும் என்றார். மேலும், நோயாளிகளை கையாளும் மருத்துவர்கள், செவிலியர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், மருத்துவமனை என்பதையும் தாண்டி நோயாளிகளை அவர்களின் வீட்டிலேயும், தனிமைப்படுத்தும் இடங்களிலும் கூட முறையாக கவனிக்கும் அடிப்படையை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒமிக்ரானின் தாக்கம் என்பது வெளிநோயாளிகளையும், வீட்டில் இருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளையுமே அதிகம் கொண்டுவரும். ஐசியூ மாதிரியான பெரிய சிகிச்சைகள் தேவைப்படாது எனக் குறிப்பிட்டுள்ளார். ஓமிக்ரான் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் தாக்கத்தை கொடுத்துவிடாது என்றாலும் அரசும், மருத்துவ துறைகளும் முழு எச்சரிக்கையுடனும், சமாளிக்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
இதற்கிடையில், ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதால், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைனில் வகுப்புக்களை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது
Omicron Variant: முந்தைய அலைகளுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரான் தொற்றின் பாதிப்பு என்ன? தரவுகள் இதோ..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்