Covid Vaccine Children: குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவா? சந்தேகமும் விளக்கமும்..
குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடு இருக்கும்போது தடுப்பூசி போடலாமா?
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சார்பில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் மேற்குறிப்பிட்ட தடுப்பூசிகளுடன், ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்களுக்கு 180 கோடிக்கும் அதிகமான தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டது.
இந்தியாவில் தற்போது குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்படும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் மாதிரி, நம்பிக்கை ஊட்டி வருகிறது.
இஸ்ரேல் மாதிரி
இஸ்ரேலில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள கடந்த ஆண்டு முதலே குழந்தைகளுக்கு ஃபைஸர் தடுப்பூசி போடப்படுகிறது. அங்கு 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசி 21 நாட்கள் இடைவெளியில் 2 தவணை போடப்படுகிறது. குறைந்தபட்சம் 5 மாதங்கள் கழித்து பூஸ்டர் தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளலாம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட குழந்தைகளும் கோவிட் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளலாம். அத்தகைய குழந்தைகளுக்கு, மீண்டதில் இருந்து 3 மாதங்கள் கழித்துத் தடுப்பூசியைச் செலுத்தலாம். முன்னதாக அங்கு பள்ளிகளில் தொற்று நிகழ்வுகள் ஏற்பட்டபிறகு, கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அங்குள்ள பச்சிளம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு தவணை தடுப்பூசி
இந்தியாவில் கரோனா வைரஸ் அலை ஓய்ந்து வரும் சூழலில், 12 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (மார்ச் 16) நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. நாக்பூர் பகுதியில் 525 சிறார்களுக்குச் சோதனை முறையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு அவர்களுக்கு எந்தப் பக்க விளைவும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்ட பிறகே சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தைகளுக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிகல் - இ நிறுவனத்தின் கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இரு தவணை தடுப்பூசிகள் 28 நாட்கள் இடைவெளியில் செலுத்தப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
12 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அதாவது 2010 மற்றும் அதற்கு முன்பு பிறந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும். இதற்கு, https://selfregistration.cowin.gov.in/ என்ற முகவரிக்குச் சென்று, ஆதார் அடையாள அட்டை விவரங்களைக் குறிப்பிட்டு ரெஜிஸ்டர் செய்யலாம். ஆதார் இல்லை என்றால் மாணவர் அடையாள அட்டையை வைத்து ரிஜிஸ்டர் செய்யலாம். குடும்பத்தில் 4 பேர் ஒரே தொலைபேசி எண்ணைக் குறிப்பிட முடியும்.
தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லதா?
குழந்தைகள் கோவிட் -19 நோயால் குறைவாகவே பாதிக்கப்படுவதால், தடுப்பூசியின் பக்க விளைவுகள் பெற்றோருக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
அண்மையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில், சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு தடுப்பூசி போட்டபிறகு, எதிர்பாராத விதமாக கண் பார்வை பறிபோயுள்ளது. மற்றொரு மாணவிக்கு கை, கால்கள் செயலிழந்துள்ளன. இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது குறித்து பெற்றோர் மத்தியில் அச்சமும் கேள்விகளும் எழுந்துள்ளன. இதுகுறித்து மூத்த மருத்துவரும் தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் உறுப்பினருமான அமலோற்பவநாதன் 'ஏபிபி நாடு'விடம் பேசினார். ''18 வயதுக்கு மேற்பட்டோரில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. இரண்டாவது தவணை தடுப்பூசி 75 சதவீதத்துக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இயல்பாகவே உள்ள நோய் எதிர்ப்பு (zero prevalence) 90 சதவீத அளவுக்கு உள்ளது
இனி மீதமுள்ளோர் 18 வயதுக்குக் குறைவானவர்கள்தான். அதாவது 0 முதல் 18 வயது வரையானோர்தான் கொரோனா எதிர்ப்பு வளையத்துக்குள் வராமல் உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. எனினும் சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் தொற்றுப் பரவல் நிலை கவலை அளிக்கிறது. அங்கிருந்து உருமாறி கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு வருமா? வந்தால் அது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்? என்று யாருக்குமே தெரியவில்லை.
கொரோனா வீரியத்துடன் வருவதற்கு சாத்தியக் கூறுகள் குறைவு என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் எல்லாவற்றையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இப்போது தடுப்பூசி செலுத்தப்படாத மக்கள் என்பது குழந்தைகளே. இப்போது கொரோனா தொற்று லேசாக இருக்கும் காலத்திலேயே, குழந்தைகளுக்கு ஒரு தவணை தடுப்பூசியையாவது செலுத்த வேண்டியது அவசியம். நோய் வந்தபிறகு சிகிச்சையா, முன்னெச்சரிக்கையாகத் தடுப்பூசியா என்று யோசித்துப் பாருங்கள்.
குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்பட்சத்தில், அவர்கள் சுமார் 80 சதவீதம் தடுப்பூசி செயல்திறனைப் பெற்றுவிடுவார்கள். பின்பு கொரோனா உருமாறி வந்தாலுமே, பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த நல்ல முயற்சியில் அரசாங்கத்துடன் அனைத்து மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் மிக மிகக் குறைவு. எனவே பெற்றோர்கள் பயமின்றி தங்களின் குழந்தைகளுக்குத் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.
அண்மையில் சோளிங்கர் அருமே இரண்டு குழந்தைகளுக்கு தடுப்பூசிக்குப் பிறகு பாதிப்பு ஏற்பட்டுள்ளதே?
அது சம்பந்தப்பட்ட மாணவிகளின் மரபணு மாற்றத்தால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம். அதற்கும் தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இருந்திருக்காது.
கொரோனா வைரஸால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பில்லை என்ற சூழல் நிலவும்போது அவர்களுக்குத் தடுப்பூசி அவசியமா?
இப்போதுள்ள வைரஸ் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். உருமாறும் வைரஸ் எப்படி இருக்கும் என்பது யாருக்குமே தெரியாது.
குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடு இருக்கும்போது தடுப்பூசி போடலாமா?
தாராளமாகப் போடலாம். அதில் எந்தத் தயக்கமும் தேவையில்லை.
எப்போது குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடக்கூடாது?
மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அளவுக்கு தீவிரமான உடல்நலப் பிரச்சினைகள் இருக்கும்போது, அவர்களுக்குத் தடுப்பூசி போடக்கூடாது. மருத்துவர்களின் அறிவுறுத்தலுக்குப் பிறகே தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்''.
இவ்வாறு மருத்துவர் அமலோற்பவநாதன் தெரிவித்தார்.
அண்மையில் 3 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி அடுத்த 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். இந்தக் குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளதாகவும் ஆய்வுகள் அனைத்தும், சிறப்பான முடிவுகளை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கொரோனா தொற்றுப் பரவலும் அதைத் தொடர்ந்த ஊரடங்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாய்க் குழந்தைகளின் கல்வியையும் அவர்களின் பால்யத்தையும் குலைத்து விட்டது. இந்த சூழலில் அவர்களின் கற்றல் பணி, இடையூறு இல்லாமல் தொடர வேண்டும். அதே நேரத்தில் குழந்தைகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )