President Rules: குடியரசு தலைவர் ஆட்சி..! இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமலானதே இல்லை? எங்கு அதிக முறை அமலானது..!
President Rules: இந்தியாவில் இந்துவரை எந்தெந்த மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி அமலானதே இல்லை என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

President Rules: இந்தியாவில் இந்துவரை எந்தெந்த மாநிலங்களில் அதிகமுறை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி:
மணிப்பூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் வன்முறைக்கு மத்தியில், சமீபத்தில் இரண்டு முக்கிய அரசியல் முன்னேற்றங்கள் அரங்கேறின. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரைன் சிங் திடீரென தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு, கடந்த வியாழனன்று மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பிரைன் சிங்கின் ராஜினாமாவுக்குப் பிறகு, பாஜகவால் அடுத்த முதலமைச்சரை ஒருமனதாக முடிவு செய்ய முடியவில்லை என்றும், அதன் பிறகு ஆளுநரின் பரிந்துரையின் பேரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குடியரசு தலைவர் ஆட்சி வரலாறு:
இந்தியாவில் மாநில அரசை கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தப்படுவது என்பது இது முதல் முறை அல்ல. அரசியலமைப்பின் 356வது பிரிவின்படி, அல்லது எளிமையான வார்த்தைகளில் சொன்னால், நாட்டின் 134 வெவ்வேறு பகுதிகளில் இதுவரை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிப்பூர் மற்றும் உத்தரப்பிரதச மாநிலங்களில் தான் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மணிப்பூரில் 11 முறையும், உத்தரபிரதேசத்தில் 10 முறையும் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு முறை கூட குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படாத மாநிலங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
நீண்ட காலம் குடியரசு தலைவர் ஆட்சி நிலவியது எங்கு?
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களோடு, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தான் மிக நீண்ட காலமாக குடியரசு தலைவர் ஆட்சி நீடித்தது. தரவுகளின்படி 1950 முதல் மணிப்பூரில் 11 முறையும், உத்தரபிரதேசத்தில் 10 முறையும், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தலா 9 முறையும் குடியரசு தலைவர் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, ஜம்மு-காஷ்மீர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக (4668 நாட்கள்) குடியரசு தலைவர் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள பஞ்சாபில் 10 ஆண்டுகளும் (3878 நாட்கள்), அதே நேரத்தில் புதுச்சேரி அதன் வரலாற்றில் 2739 நாட்களுக்கு மேலும் (7 ஆண்டுகள்) குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.
குடியரசுத் தலைவர் ஆட்சியை அதிகம் அமல்படுத்தியது யார்?
1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில்தான் அதிக முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்திரா காந்தியின் இரண்டு பதவிக்காலத்தில் 51 முறை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு மொரார்ஜி தேசாயின் பதவிக் காலத்தில் 17 முறை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பட்டியலில் அடுத்ததாக நரசிம்மராவ் காலத்தில் 11 முறையும், மன்மோகன் சிங் காலத்தில் 12 முறையும், நரேந்திர மோடி காலத்தில் 10 முறையும், அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் 5 முறையும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் ஆட்சி விதிக்கப்படாத மாநிலம்?
சுதந்திரம் பெற்றதிலிருந்து, இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஒருபோதும் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சத்தீஷ்கர் மாநிலம் கடந்த 2000வது ஆண்டிலும், தெலங்கானா மாநிலம் 2014ம் ஆண்டிலும் மாநிலங்களாக உருப்பெற்றது குறிப்பிடத்தக்கது.






















