Fact Check : ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு பின் இருப்பது இயேசு கிறிஸ்து ஓவியமா? வைரலாகும் போட்டோ உண்மையா?
ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு பின்னே இயேசு கிறிஸ்துவின் ஓவியம் இருப்பதாக புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதன் உண்மைத்தன்மை குறித்து தெரிந்து கொள்வோம்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், டெல்லியில் இன்று வாக்கு செலுத்திய ராகுல் காந்தி, வீட்டில் தனது தாயார் சோனியா காந்தியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்தார். சமூக வலைதளங்களில் அந்த குறிப்பிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
பரப்பப்படும் தகவல் என்ன? பூணூல் அணியும் பிராமணர் என தன்னை தானே சொல்லி கொண்டு, தனது அறையில் இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தை வைத்திருப்பதாகவும் ஒரு இந்து மத கடவுளின் புகைப்படம் கூட அங்கு இல்லை என அந்த புகைப்படத்தை பகிர்ந்தவர்கள், ராகுல் காந்தியை விமர்சித்து வருகின்றனர்.
இந்த பதிவை 'MrSinha_' என்பவரும் பகிர்ந்துள்ளார். இவர், கடந்த காலத்திலும் தவறான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ஆனால், வைரலாகும் பதிவில் இருப்பது இயேசு கிறிஸ்து அல்ல. அது ரஷிய ஓவியர் நிக்கோலஸ் ரோரிச் வரைந்த 'மடோனா ஓரிஃப்ளம்மா' என்ற ஓவியம் ஆகும். அமைதியை குறிக்கும் சின்னம் பொறிக்கப்பட்ட பதாகையை ஏந்தியபடி ஒரு பெண்மணி அந்த ஓவியத்தில் காட்சி அளிக்கிறார்.
உண்மையை கண்டுபிடித்தது எப்படி? பின்னணியில் உள்ள புகைப்படத்தில் ஒரு நபர் சிவப்பு வட்டத்தால் சூழப்பட்ட மூன்று சிவப்பு புள்ளிகள் கொண்ட பேனரை வைத்திருப்பதை நாங்கள் கவனித்தோம்.
'person holding red circle with three dots painting' என கூகுளில் போட்டி தேடினோம். 2017ஆம் ஆண்டு பதிவேற்றப்பட்ட வலைப்பதிவு ஒன்றில் இந்த புகைப்படம் இருந்ததை கண்டறிந்தோம்.
கடந்த 1932 ஆம் ஆண்டு, நிகோலாய் ரோரிச் என்பவர் வரைந்த 'மடோனா ஓரிஃப்ளம்மா' ஓவியம் என அதில் போட்டிருந்தது.
ஜியோமெட்ரிக் கலை என்பது ரோரிச்சின் உருவாக்கம் என்றும், அதை அவர் 'அமைதியின் பதாகை' என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த ஓவியம் என்ன குறிக்கிறது என்பதை விளக்கும் விதமாக இது அமைந்தது.
ஓவியத்தின் பெயரைப் போட்டு கூகுளில் தேடினோம். இணையத்தில் உள்ள பல இணையதளங்களில் அதைக் கண்டோம்.
இந்த ஓவியம் நியூயார்க்கில் உள்ள நிக்கோலஸ் ரோரிச் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டதாக ஒரு தகவல் தெரிய வந்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டு, அருங்காட்சியகத்தின் பேஸ்புக் பக்கத்திலும் ஓவியத்தின் புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. அதன் பொருள் மற்றும் குறியீடு ஆகியவை பற்றி விவரிக்கப்பட்டிருந்தது.
ஓவியத்தின் அளவு மற்றும் பரிமாணம் பற்றிய விவரங்களுடன் கூடிய காட்சி ரோரிச்சின் இணையதளத்தில் வெளியிடப்படட்டுள்ளது. இது 1960 ஆம் ஆண்டு முதல் அருங்காட்சியகத்திற்கு கடனாக அளிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓவியத்தின் அச்சிடப்பட்ட பதிப்புகள் இணையத்தில் எளிதாக வாங்கலாம்.
தீர்ப்பு: ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு பின்னே இருப்பது இயேசு கிறிஸ்துவின் படம் அல்ல என்பது தெளிவாகிறது.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக TheQuint என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தியை மொழிமாற்றம் செய்து சற்றே திருத்தி எழுதியுள்ளது.