Yuvan Shankar Raja: யுவனுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்..ரசிகர்கள் கொண்டாட்டம்
சமீபத்தில் யுவன் தனது மனைவி சஃப்ரூன் நிசர், அவரின் தம்பி அஹமத் ஆகியோருடன் மதினாவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டார்.
பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை கௌரவப்படுத்தும் வண்ணம் ஐக்கிய அரபு அமீரக அரசு அவருக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது.
1997 ஆம் ஆண்டு சரத்குமார் நடித்த அரவிந்தன் படம் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன் ஷங்கர் ராஜா. இசைஞானி இளையராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன் அறிமுகமான அவர், அப்பாவை போலவே இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார். யுவனுக்கு சூர்யா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படம் நல்ல அடையாளமாக அமைந்தது. அதுவரை கிராமத்து,கானா என கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களை யுவனின் புதுவிதமான இசை கவர்ந்தது.
அந்த வகையில் பாடல்கள் தாண்டி பிஜிஎம் எனப்படும் பின்னணி இசையில் சிறந்தவர் யார் என கேட்டால் அந்த நிச்சயம் யுவனின் பெயர் தான் முதலிடத்தில் இருக்கும். இதுவரை 130 படங்களுக்கும் மேலாக இசையமைத்துள்ள யுவன் இசையில் கடந்த வாரம் லவ் டுடே, காஃபி வித் காதல் ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஏஜென்ட் கண்ணாயிரம், பரம்பொருள், ஏழு கடல் ஏழு மலை படம் என மீண்டும் தமிழ் சினிமாவில் மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளராக யுவன் மாறியுள்ளார்.
View this post on Instagram
இதனிடையே 2014 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தை தழுவிய யுவன், 2016 ஆம் ஆண்டு சஃப்ரூன் நிசர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். சமீபத்தில் யுவன் தனது மனைவி சஃப்ரூன் நிசர், அவரின் தம்பி அஹமத் ஆகியோருடன் மதினாவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டார். மேலும் யுவனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பதிவுகளை மனைவி சஃப்ரூன் நிசர் தனது சமூக வலைத்தளத்தில் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்க அந்நாட்டு கோல்டன் விசா வழங்கி வருகிறது. இத்தகைய கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.