மோகன் ஜிக்கு சோதனை மேல் சோதனை... திருட்டுக்கதையா ருத்ரதாண்டவம்? வைரலாகும் வீடியோ!
உங்களை எப்படியெல்லாம் நம்பினேன். இவ்வளவு மோசமான ஆளாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை என வேதனையுடன் ஆர்.பாலா பேச, நீங்கள் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என மோகன் ஜி....

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் 2 வதாக இயக்கிய திரௌபதி படத்தில் தலித்துகளுக்கு எதிராகவும், சாதி மறுப்பு திருமணத்துக்கு எதிராகவும், பெண்ணுரிமை பறிக்கப்படும் வகையிலும், சாதி வெறியை தூக்கிப்பிடிக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், திரௌபதி படத்தில் நடித்த ரிஷி ரிச்சர்டை வைத்தே ருத்ர தாண்டவம் என்ற படத்தை இயக்கி இருக்கிறார் மோகன் ஜி. இதில், பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. இது தொடர்பாக பிரிவியூ காட்சிகளும் திரையிடப்பட்டன. இந்தப்படத்தின் சிறப்பு காட்சிகளை பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சியினர் படத்துக்கு பாராட்டு தெரிவித்தனர். அதே நேரத்தில் பெரும்பாலானவர்கள் படத்தில் இடம்பெற்று உள்ள காட்சிகள், கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் ஸ்நீக் பீக் வீடியோ வெளியிடப்பட்டது. அதில், கிறிஸ்தவ பாதிரியார் பண வசூலில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் வந்தது கிறிஸ்தவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, ருத்ரதாண்டவம் படத்தை தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் சிறுபான்மை மக்கள் நல கட்சி தேசிய தலைவர் சாம் யேசுதாஸ் மனு தாக்கல் செய்தார். கிறிஸ்தவ மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் மோகன் ஜி வசனம் மற்றும் காட்சிகளை வைத்து இருப்பதாகவும் சிறுபான்மை கிருஸ்தவர்களை படத்தில் தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளது எனவும், இரு மதத்தினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் பட தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்து வியாழக்கிழமை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனிடையே படத்தின் இயக்குநர் மோகன் ஜி வேறு ஒரு இயக்குநரின் கதையை திருடி ருத்ர தாண்டவம் படத்தை இயக்கி இருப்பதாக தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆர்.பாலா என்ற இயக்குநர் போர்க்குடி என்ற படத்துக்கான கதை கருவை மோகன் ஜியிடம் தெரிவித்ததாகவும், அதை வைத்து மோகன் ஜி ருத்ர தாண்டவம் படத்தை இயக்கி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக மோகன் ஜியுடன் இயக்குநர் ஆர்.பாலா பேசும் தொலைபேசி உரையாடல் ஒன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், பேசும், ஆர்.பாலா உங்களிடம் நம்பி பி.சி.ஆர். சட்டத்தை வைத்து கதை செய்யபோவதாக சொன்னேன். ஆனால், நீங்கள் அதை வைத்து ருத்ர தாண்டவம் படம் இயக்கியது தவறு என சொல்கிறார். மறுமுனையில் பேசும் மோகன் ஜி, பி.சி.ஆர். சட்டம் பற்றி இடைவெளியில் வருகிறது. ஆனால், உங்கள் கதையை திருடவில்லை என பேசுகிறார். உங்களை எப்படியெல்லாம் நம்பினேன். இவ்வளவு மோசமான ஆளாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை என வேதனையுடன் ஆர்.பாலா பேச, நீங்கள் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என மோகன் ஜி பதிலளிக்கிறார். திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாக பரவி வரும் இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















