PS2 : ஆதித்ய கரிகாலனை சந்தித்த நந்தினி என்ன பேசினாள்? புதிருக்கு என்ன விடை சொல்லப்போகிறார் மணிரத்னம்?
ஆதித்ய கரிகாலன் - நந்தினி இடையே இருக்கும் காதல் ஒரு தனித்துவமான காதல். ஆனால் அது எப்படி வன்மமாக மாறியது. விடை சொல்லும் பொன்னியின் செல்வன் 2 நாளை வெளியாகிறது
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' நாவல் இரண்டு பாகங்களாக உருவானது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா துலிபாலா, சரத்குமார், பார்த்திபன் மற்றும் பலர் என ஏராளமான திரை நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி 'பொன்னியின் செல்வன் 1' உலகெங்கிலும் பான் இந்திய படமாக வெளியானது. மாபெரும் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 பாகம் நாளை உலகமெங்கும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
சூழ்ச்சியில் சிக்குமா சோழ நாடு ?
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்ளை தூண்டிவிட்டு ஆதித்ய கரிகாலன் மீது இருக்கும் வஞ்சகத்தை தீர்த்து கொள்ள சூழ்ச்சி செய்யும் நந்தினியால் சோழ நாட்டுக்கும், அரியணைக்கு என்ன ஆபத்து காத்திருக்கிறது அதை எப்படி வந்தியத்தேவனும், அருள்மொழிவர்மனும் எதிர்கொள்கிறார்கள் என பல முடிச்சுகளுக்கும் விடையாக உள்ளது நாளை வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் 2 .
ஆதித்ய கரிகாலன் - நந்தினி உறவு :
ஆதித்ய கரிகாலன் - நந்தினி இடையே அன்பும் வெறுப்பும் கலந்த ஒரு உறவு இருந்து வருகிறது. சிறுவயது காதல் அவர்கள் முன்னால் தோன்றி மறைந்தாலும் தீராத வன்மமும் வேரூன்றி நிற்கிறது. ஆதித்ய கரிகாலன் - நந்தினி இடையே இருக்கும் காதல் ஒரு தனித்துவமான காதலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் ஆழமாக காதல் கொள்கிறார்கள் அதே சமயத்தில் கொல்லக்கூடிய அளவிற்கு வெறுக்கவும் செய்கிறார்கள்.
தனக்கு பயந்து ஓடிய வீரபாண்டியனின் காதலிதான் நந்தினி என தெரிய வர ராஜ்யத்தை காட்டிலும் என் மனதில் குடி கொண்டவளை அடைந்ததற்காக வெறியும் கோபமும் கொண்டு வீரபாண்டியனை வெட்டி வீழ்த்துகிறான் ஆதித்ய கரிகாலன். அந்த நொடியில் நந்தினியின் பார்வை தான் கரிகாலன் மனப்போராட்டங்களுக்கு காரணமாகிறது. அதை மறக்கவும் முடியாமல், அர்த்தமும் புரியாமல் தவிக்கும் கரிகாலன் நந்தினியை சந்தித்து பேசி கொள்ளும் வாய்ப்பும் வருகிறது. அப்போது அவர்கள் என்ன பேசினார்கள்? அந்த சமயத்தில் ஆதித்ய கரிகாலனுக்கு என்ன நேர்ந்தது?
சஸ்பென்ஸ் வைத்த மணிரத்னம் :
அவர்கள் இருவரின் இடையே இப்படி ஒரு வன்மம் வருவதற்கு பின்னணி என்ன? நந்தினி யார் அவளின் ஃப்ளாஷ்பேக் என்ன? ஆதித்யா கரிகாலன் கொல்லப்படுவானா? அப்படி என்றால் அவனை கொல்லப் போவது யார்? ஒரிஜினல் நாவலில் கல்கி வைத்த சஸ்பென்ஸை மணிரத்னம் எப்படி மாற்றி அமைத்துள்ளார் என பல ஸ்வாரஸ்யமான கேள்விகளுக்கு நாளை விடை கிடைத்துவிடும் என்பதால் மக்கள் மிகவும் ஆவலுடன் நாளை விடியலுக்காக காத்திருக்கிறார்கள்.