‛தாலி தமிழர் கலாச்சாரம் அல்ல... திருமணத்தின் அடையாளம் குழந்தை தான்’ - குக் வித் கோமாளி ’கனி’ சர்சை பதில்!
”ஒருவர் தாலியை வைத்து அவரின் குணங்களை அடையாளப்படுத்துவது தவறு, எங்கள் திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக குழந்தை உள்ளது.”
சின்னத்திரையில் ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கனி. இவர் தனது எதார்த்தமான பேச்சாலும் , சமையல் திறமையாலும் நடுவர்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களின் மனதிலும் இடம் பிடித்தவர். குக் வித் கோமாளியின் போட்டியாளர்கள் பலருக்கும் பிடித்தவரும் கூட கனிதான். இவர்தான் அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளரும் ஆவார். காதல் கோட்டை போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் அகத்தியனின் மூத்த மகள் கனி , இவரது இயற்பெயர் கார்த்திகா என்பதும் கூடுதல் தகவல். கனி தற்போது யுடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் கனி நேற்று தனது ரசிகர்களுடன் லைவ் மூலம் உரையாடினார். அப்போது சிலர் “ நீங்கள் ஏன் தாலி அணிவதில்லை” என்ற கேள்வியை கேட்க , அதற்கு பதிலளித்த அவர் “ என்னிடம் யூடியூப் வாயிலாகவும், கமெண்டுகள் வாயிலாகவும் எல்லோரும் இதயே கேட்குறீங்க, தாலி அணிவது தமிழர் கலாச்சாரத்துல இல்லாத ஒரு விஷயம் , இடையில் புகுத்தப்பட்ட ஒன்று எனக்கு அதன் மீது நம்பிக்கை இல்லை “. என்றார்.
View this post on Instagram
மேலும் தனது திருமணம் தாலிக்கட்டிதான் நிகழ்ந்ததாகவும், திருமணத்தின் போது கட்டப்படும் மொத்தமான மஞ்சள் கயிறு தாலி தனக்கு பிடித்திருந்ததால் நான் அதை அணிந்துக்கொண்டேன் என்றார். பின்னர் அந்த தாலியை வேறு ஒருவர் மாற்றி கட்டியவுடன் அதன் மீதான நம்பிக்கை தற்போது இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ”என் கணவன் எனக்கு கட்டிய தாலியை நான் இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன். அதுதான் எனக்கானது வேறு ஒருவர் மாற்றி கட்டிய தாலியை நான் ஏன் அணிய வேண்டும் ” என வெளிப்படையாக பேசியுள்ளார். தமிழர் மரபு என்பது தனக்கு பிடித்த துணையை தேர்வு செய்து , மரியாதைக்கு உரியவர்கள் முன்னிலையில், ஒருவருக்கு ஒருவர் மாலை அணிவித்து ஒன்றாக சேர்ந்து வாழ்வதுதான் என தெரிவித்த கனி எனது கணவருடன் 8 வருட காதல் மற்றும் 12 வருட திருமண வாழ்க்கை என சந்தோசமாக வாழ்ந்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
ஒருவர் தாலியை வைத்து அவரின் குணங்களை அடையாளப்படுத்துவது தவறு, எங்கள் திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக குழந்தை உள்ளது. இதைவிட வேறு அடையாளம் வேண்டுமா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார். யாரோ ஒருவர் கூறும் கருத்திற்காக சில நிமிடங்கள் சமூக வலைத்தளங்களில் தாலி அணிந்திருப்பது போல பாசாங்கு செய்ய முடியும். ஆனால் அதை நான் செய்ய விரும்பவில்லை , ஏனெனில் எனது நிலைப்பாடு இதுதான் , நான் யாரையும் போலியாக ஏமாற்ற விரும்பவில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார். மேலும் நான் அதிகம் பேசுவேன் என கணவர் எனக்கு முரணானவர், அமைதியாக இருப்பார். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்றார். மேலும் தமிழ் மீது தான் கொண்ட பற்றை வெளிப்படுத்தும் விதமாக “உயிர் தமிழுக்கு “ என வட்டெழுத்தில் பச்சை குத்தியிருப்பதையும் தனது ரசிகர்களுக்கு விளக்கினார். தற்போது கனி லைவில் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.