Johnny Depp: மீண்டும் கேப்டன் ஜாக் ஸ்பேரோ-ஆக களமிறங்கிய ஜானி டெப்.. ரசிகர்கள் உற்சாகம்
கேப்டன் ஜாக் ஸ்பேரோ ஆக ஜானி டெப் வேடமணிந்து வெளியிட்டுள்ள வீடியோ, இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகரான ஜானி டெப், பைரட்ஸ் ஆப் தி கரீபியன் படங்களில் இடம்பெற்ற கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரம் மூலம் உலகப் புகழ் பெற்றார். அந்த பட வரிசையில் ஏற்கனவே 5 பாகங்கள் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நிலையில், ஆறாம் பாகமும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி அறிவித்து இருந்தது. இதனிடையே, ஜானி டெப் மீது அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதன் காரணமாக ஜானி டெப் பல்வேறு திரைப்படங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார். குறிப்பாக பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படத்தின் பெரும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜானி டெப்பை, எந்தவித தகவலும் தெரிவிக்காமல் டிஸ்னி நிறுவனம் படத்திலிருந்து நீக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டிஸ்னியில் நடிக்க மறுத்த ஜானி டெப்:
இதனிடையே, ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்கில் ஜானி டெப் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைதொடர்ந்து, பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்களில், அவர் மீண்டும் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இனி 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பளமாக கொடுத்தாலும் டிஸ்னியின் படங்களில் நடிக்க மாட்டேன் என ஜானி டெப் கூறியிருந்தார். ஆனால், தற்போது அவர் மீண்டும் கேப்டன் ஜாக் ஸ்பேரோவாக வேடமணிந்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனால், மீண்டும் அவர் பைரட்ஸ் படங்களில் நடிக்க உள்ளார் என ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.
சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஜானி டெப்:
ஆனால், நோய்வாய்ப்பட்ட 11 வயது சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஜானி டெப் அந்த வேடமணிந்தது தெரிய வந்துள்ளது. யூடியூபர் கோரி எனும் அந்த சிறுவனுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யும் முயற்சி ஏற்கனவே இரண்டு முறை தோல்வியடைந்துள்ளது. மீண்டும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான், அந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஜானி டெப், ஜாக் ஸ்பேரோவாக வேடமணிந்துள்ளார். மேலும், தொலைபேசி மூலமாகவும், கோரியை தொடர்புகொண்டு பேசி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
ஜானி டெப் வெளியிட்ட வீடியோ:
மாறு வேடமணிந்து ஜானி டெப் வெளியிட்டுள்ள வீடியோவில், நான் உங்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்கள் நம்பர் ஒன் ரசிகன் கேப்டன் கோரி, உங்களுக்கு எனது மரியாதையையும், அன்பையும் வழங்குகிறேன். கேப்டன் கோரி, நீங்கள் யூடியூப் சேனல் மேன் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதனால் உங்கள் யூடியூப் சேனலைப் பின்தொடர்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் யூடியூப் சேனலைப் பின்தொடருமாறு எனது நண்பர்கள் அனைவருக்கும் கூறுவேன் எனவும், ஜானி டெப் கூறியுள்ளார். தொடர்ந்து தொலைபேசி வாயிலாகவும் கோரியை தொடர்பு கொண்டு, அவர் விரைவில் குணமடையவும், மீண்டு வரவும் வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்துள்ளார். சிறுவனுக்காக ஜானி டெப் செய்த காரியத்திற்காக, ரசிகர்கள் நன்றி தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக கடந்த 2017ம் ஆண்டும் கேப்டன் ஜாக் ஸ்பேரோவை போன்று வேடமணிந்து, குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்த நபர்கள் உடன், ஜானி டெப் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.