Vishal case: லைகா நிறுவனத்துக்கு பணம் தர தயாரான விஷால்.. முடிவுக்கு வருகிறதா பிரச்னை?
விஷாலின் ஆறு வங்கி கணக்குகளின் விவரங்களும், சொத்து விவரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் விஷால் வங்கி கணக்கில் ரூ.80 கோடி பண பரிவர்த்தனை நடந்த தகவலும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Vishal case: நீதிமன்றத்தின் எச்சரிக்கையால் லைகா நிறுவனத்திற்கு ரூ. 21 கோடி தர தயார் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி நிறுவனம் மூலம் திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியனிடம் இருந்து ரூ.21.29 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த கடனை ஏற்று கொண்ட லைகா நிறுவனம் அந்த தொகையை முழுவதுமாக திருப்பி செலுத்திவிட்டு, விஷால் எடுக்கும் அனைத்து படங்களின் உரிமையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் மேற்கொண்டது.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை விஷால் மீறியதால் லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. மனு மீது கடந்த 12ம் தேதி நடந்த விசாரணையில் நீதிமன்றத்தில் விஷால் நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது, அவரது வங்கி கணக்கு விவரங்கள், அவருக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துகள் என அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த விவரங்களை தாக்கல் செய்யாததால் நீதிபதி பி.டி. ஆஷா முன்பு விஷால் தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத விஷால் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதி, வங்கிகளின் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, விஷாலின் ஆறு வங்கி கணக்குகளின் விவரங்களும், சொத்து விவரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் விஷால் வங்கி கணக்கில் ரூ.80 கோடி பண பரிவர்த்தனை நடந்த தகவலும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவை அனைத்தையும் ஆய்வு செய்த நீதிபதி ஏன் பணத்தை செலுத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பணத்தை தர தாங்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால் லைகா நிறுவனத்தின் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு வர மறுப்பதாக விஷால் தரப்பு வழக்கறிஞர் கூறினார். விஷால் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் ஒத்தி வைத்தார்.
தற்போது விஷால் நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி நல்ல வரவேற்பை பெற்றதுடன், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.100 கோடியை எட்டியது. இந்த படத்துக்காக மும்பை சென்சார் போர்டுக்கு ரூ.6.5 லட்சம் பணம் கொடுத்ததாக விஷால் பேசிய வீடியோ வைரலானதுடன், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கையும் எடுத்தது. இந்த சூழலில் விஷால் மீது இருக்கும் பண பிரச்சனை புகார் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் படிக்க: Suhasini On Vijay: காவலன் படத்துக்கு அப்புறம் விஜய் ரொம்ப பிடிக்குது... சுஹாசினி மணிரத்னம் பளிச்!