Suhasini On Vijay: காவலன் படத்துக்கு அப்புறம் விஜய் ரொம்ப பிடிக்குது... சுஹாசினி மணிரத்னம் பளிச்!
காவலன் திரைப்படத்துக்குப் பின் நடிகர் விஜய்யின் நடிப்பு தன்னை ஈர்த்ததாக நடிகை சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவை மையப்படுத்தி ‘தெற்கின் எழுச்சி’ என்கிற தலைப்பி கீழ் “ABP Southern Rising Submit 2023” என்ற பெயரில் பிரம்மாண்ட கருத்தரங்கு சென்னையில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் ராணா டகுபதி, நடிகை ரேவதி, நடிகை குஷ்பு உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் பங்கேற்றனர். சினிமாவில் பெண்களின் பங்கு, அரசியலில் பெண்களின் பங்கு என பல்வேறு தலைப்பின் கீழ் இந்த பிரபலங்கள் பேசினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சுஹாசினி தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது தன்னைக் கவர்ந்த இளம் இயக்குநர்கள், பெண்களை மையப்படுத்தி வரும் சமகால படங்கள் மற்றும் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் லியோ படம் ஆகியவை குறித்து பேசினார் சுஹாசினி.
சுஹாசினிக்கு பிடித்த இயக்குநர்கள்
தான் இயக்கிய இந்திரா படத்தை சுயவிமர்சனம் செய்த சுஹாசினி பட்டியலின சமூகத்தைப் பற்றிய ஒரு படத்தை எடுக்க தேவையான முதிர்ச்சி தன்னிடம் இல்லை என்றும், ஆனால் தற்போது தமிழ் சினிமாவின் பல இயக்குநர்கள் மிகத் தெளிவாக ஒடுக்கபட்ட மக்களுக்கான அரசியலை பேசுவதாகவும் தெரிவித்தார். இந்த வரிசையில் இயக்குநர் ரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ் முதலியவர்களை சுஹாசினி பாராட்டி பேசினார்.
இதனைத் தொடர்ந்து தன் மனம் கவர்ந்த இயக்குநர் என இயக்குநர் வெற்றிமாறனை குறிப்பிட்டார். மேலும் நெல்சன், ரஞ்சித், மாரி செல்வராஜையும் இந்த வரிசையில் அவர் குறிப்பிட்டார். கமர்ஷியல் பட இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ படத்தை பார்க்க தான் ஆர்வமாக காத்திருப்பதாக கூறினார்.
விஜய்யின் நடிப்பு மெச்சூர் ஆகியிருக்கிறது
காவலன் படத்திற்கு பின் வெளியான படங்களில் விஜய்யின் நடிப்பு தன்னை ஈர்த்ததாக அவர் தெரிவித்தார். முன்னதாக நிறைய கமர்ஷியல் படங்களில் அவர் நடித்திருந்தாலும் காவலன் படத்திற்கு பின் விஜய்யின் நடிப்பு பக்குவம் அடைந்துள்ளதாக சுஹாசினி தெரிவித்துள்ளார்.
ரேவதி, ராதிகா, நான்
சிந்து பைரவி , மனதில் உறுதி வேண்டும் ஆகிய பெண்மையப் படங்களை தேர்வு செய்து நடித்தவர் சுஹாசினி. முன்னெப்போதையும் விடவும் பெண்களை மையப்படுத்திய படங்கள் அதிகம் வெளிவரும் இந்த சூழலை தான் எப்படி பார்க்கிறார் என்கிற கேள்விக்கு அவரது பதில்: “இப்பொது நிறைய படங்கள் பெண்களை மையப்படுத்தி வந்தாலும் எனக்கு ராதிகா மற்றும் ரேவதிக்கு வந்த மாதிரியான கதைகள் இப்போது வருவதில்லை“ என்று கூறினார்.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கெளதம் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 தேதி வெளியாக இருக்கிறது. அனிருத் இசையமைத்து 7 ஸ்கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.