(Source: ECI/ABP News/ABP Majha)
விஜய்க்கு பூனை முகம்! பாலு மகேந்திரா சொன்ன முக ரகசியம்! சீனு ராமசாமி சொன்ன கதை!
நடிகர் விஜய்யின் வெற்றிக்குக் காரணம் இதுதான் என்று பாலு மகேந்திரா கூறிய காரணத்தைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.
நடிகர் விஜய்யின் வெற்றிக்குக் காரணம் இதுதான் என்று பாலு மகேந்திரா கூறிய காரணத்தைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் சீனு ராமசாமி. ’கூடல் நகர்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் தென்மேற்குப் பருவக் காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட வெற்றிப் படங்களை இதுவரை கொடுத்து உள்ளார்.
இவரது இயக்கத்தில் கடைசியாக உருவாகி உள்ள திரைப்படம் மாமனிதன்.
இந்நிலையில் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்த சீனு ராமசாமி விஜய்யின் வெற்றிக்கான காரணமாக பாலு மகேந்திரா சொன்ன விஷயத்தைப் பகிர்ந்தார்.
அந்தப் பேட்டியில் சீனு ராமசாமி, "ஒருநாள் நான் பாலு மகேந்திரா சாருடன் காரில் சென்று கொண்டிருந்தேன். முன் சீட்டில் சார் உட்கார்ந்திருக்கிறார். பின் சீட்டில் நான் இருந்தேன். விஜய் வீட்டைத் தாண்டி தான் எங்கள் அலுவலகம் இருந்தது. நாங்கள் அலுவலகத்திற்கு கூட்டத்தை தாண்டி செல்கிறோம். அப்போது சார் என்னிடம், இந்தப் பையன் மீது மக்களுக்கு ஏன் இவ்வளவு கிரேஸ் ( craze ) தெரியுமா என்றார்? நான் உடனே ரெண்டு, மூனு படம் ஹிட்டாயிருச்சு சார் என்றேன். அவர் பதில் ஒன்னும் சொல்லவில்லை. எப்போதும் இப்படித்தான் ஏதாவது கேட்டுவிட்டு அமைதியாக இருந்துவிடுவார். நம் அறியாமை எல்லாம் தீர்ந்தவுடன் அதற்கு பதில் சொல்வார். சில மணி நேரம் கழித்து விளக்கம் சொன்ன சார்,
விஜய்யின் முகம் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றார். திரை நட்சத்திர உலகில் சாதித்த நடிகர்களின் முகத்தோற்றத்தை பூனை, புலி, சிங்கம், குதிரை என்று பிரிக்கலாம். அதில் ரஜினி புலி, சிவாஜி சிங்கம், விஜய் பூனை என்றார். அன்றிலிருந்து நான் இந்த ஃபார்முலாவை யூஸ் பண்ணிப் பார்க்கிறேன். இந்த முகங்கள் தான் வெற்றி முகங்களாக மாறுமாம். அதில் விஜய்யின் முகம் பூனைக் குடும்ப முகமாம். இந்த முகம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாம்" என்று கூறினார்.
நான் மிஸ் பண்ணதை கண்டுபிடித்தேன்..
"சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் நான் நிறைய விளம்பரப் படங்கள் செய்துள்ளேன். ஆனாலும் என்னால் சினிமாவில் எதிர்பார்த்த வெற்றியைக் காண முடியவில்லை. எனக்கு பாலு மகேந்திரா சாரிடம் பணியாற்றிய அனுபவம் இருந்தும், தொழில்நுட்ப விஷயங்கள் தெரிந்திருந்தும் எழுத்தில் இருக்கும் உணர்ச்சியை ரசிகரிடம் கடத்துவதில் எங்கோ பிழை செய்கிறேன் என்பதை உணர்ந்தேன். அதற்காக இரண்டு வருடங்கள் பிரேக் விட்டேன். அதன் பின்னர் நான் உருவாக்கியது தான் தென்மேற்கு பருவமழை. அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் சீனைப் பார்த்து அழாத ரசிகன் இல்லை. அதுதான் நான் இயக்குநராக வெற்றி பெற்ற தருணம் என்பேன்" என்று தனது பேட்டியில் கூறினார்.
தடம் பதித்த தர்மதுரை..
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களில் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்மதுரை. இந்த படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கிராமத்து கதைக்களத்துடன் உருவாகியிருந்த தர்மதுரை திரைப்படம் விஜய் சேதுபதி சினிமா கெரியரில் மிக முக்கியமான திரைப்படம் என கூறலாம். படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை எழுதியதற்காக கவிஞர் வைரமுத்து தேசிய விருது பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க , இந்த படத்தை ஆர்.கே.சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படம் சீனு ராமசாமி படங்களில் தடம் பதித்த படம் எனலாம்.