Vetrimaaran | சிகரெட்டை கைவிட்டேன்.. கீட்டோ.. Intermittent டயட்.. வெற்றிமாறன் சொன்ன லைஃப் சீக்ரெட்ஸ்..
நவம்பர் 14, 2008-இல் வாரணம் ஆயிரம் திரைப்படத்தை பார்த்துவிட்டு இரவு இறுதியாக புகைப்பிடித்தவர் அன்றிலிருந்து நிரந்தரமாக புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டாராம்.
தனுஷை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் வெற்றி மாறன். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக இருக்கும் வெற்றிமாறன் தற்போது சூர்யாவை வைத்து வாடிவாசல் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். வெற்றி மாறன் பிஸியான இயக்குநராக இருந்தாலும் அவர் தனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு உணவு பழக்க வழக்கங்கள், தான் மாறிய வாழ்க்கை முறை குறித்து அவ்வப்போது பகிர்வது வழக்கம் . அந்த வகையில் பிரபல டிஜிட்டல் ஊடகம் ஒன்றின் கலந்துரையாடலின்பொழுது ஆரோக்கியமான உடல்நலனின் அவசியம் குறித்து பல டிப்ஸை பகிர்ந்துள்ளார்.
வெற்றி மாறன் ஒரு செயின் ஸ்மோக்கராக இருந்தவர் என்பது அவரை குறித்து அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும் கிட்டத்தட்ட 20 வருடங்களாக தொடர்ந்து புகைப்பிடித்து வந்த வெற்றிமாறனுக்கு பொல்லாதவன் திரைப்படத்திற்கு பிறகு உடல்நிலை சற்று மோசமாகியுள்ளது. மருத்துவரை அணுகிய அவருக்கு ,அவர் சில அட்வைஸை கொடுத்துள்ளார். அதன்படி உடனடியாக புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் என மருத்துவர் கூற , பலமுறை அதற்கான முயற்சிகளை எடுத்துள்ளார், ஆனாலும் அதனை கைவிடுவது அவருக்கு அவ்வளவு எளிதாக இல்லையாம். நவம்பர் 14, 2008-ஆம் ஆண்டில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தை பார்த்துவிட்டு இரவு இறுதியாக புகைப்பிடித்தவர் அன்றிலிருந்து நிரந்தரமாக புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டாராம்.
நண்பர்கள் வட்டாரத்தில் இருந்த மருத்துவர்கள், உடற்பயிற்சியாளர்கள் உதவியுடன் கீட்டோ உணவு முறை பற்றி அறிந்து , அதனை முயற்சித்தாராம். மருத்துவ ஆலோசகர்கள் உதவியுடன் செய்ய வேண்டியதை தானாகவே முயற்சி செய்ததாக கூறும் வெற்றிமாறன். அப்படியாக செய்தால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அறிவுறுத்துகிறார். கீட்டோவிற்கு மாறிய பிறகு தன் வயிறு சந்தோஷப்பட்டதை தன்னால் உணர முடிந்தது என்கிறார். ஒரு நேரத்தில் இரண்டு கிலோ ரசகுல்லா வரைக்கும் ஒரே மூச்சில் காலி செய்த வெற்றி மாறன் தற்போது இனிப்பு துளசி, ஆர்கானிக் உணவுகள் என்ற வாழ்க்கை முறைக்கு மாறியுள்ளார். வெள்ளை சர்க்கரை போதை பொருளுக்கு நிகரான தீங்கு விளைவிக்கக்கூடியது என்கிறார் இயக்குநர். எளிமையான ஆரோக்கியமான உணவுபழக்க மாற்றங்களை யார் வேண்டுமானாலும் பழக்கப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் நான் சொல்லும் கீட்டோ முறை, நான் பயன்படுத்தும் உணவு பொருட்கள் எல்லோராலும் வாங்க முடியுமா அல்லது அதற்கான நேரம் அவர்களுக்கு இருக்குமா என்பது கேள்விக்குறிதான் என்கிறார்.
மிகப்பெரிய சூப்பர் மார்கெட்டில் வாங்குவதை விட , தள்ளுவண்டி கடைதான் சிறப்பு என்கிறார் வெற்றி மாறன். முடிந்தவரையில் விவசாயிகளிடம் இருந்து பொருட்களை வாங்குவதற்கு முயற்சிக்கலாம் என்கிறார். தனக்கு சொந்தமான தோட்டத்தில் இயற்கை உணவுகளை விளைவிக்க திட்டமிட்டிருக்கும் வெற்றிமாறனுக்கு பயோ-டீசல் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உள்ளதாம். இண்டர்மிடண்ட் ஃபாஸ்டிங் என கூறும் விரதமுறையை பின்பற்றிவரும் வெற்றி மாறன் , அதிகம் காய்கறிகளை மட்டும்தான் சாப்பிடுவாராம். ஒவ்வொருமுறை சாப்பிடும்பொழுதும் அதில் என்ன இருக்கிறது என்பதை உணர்ந்து சாப்பிட வேண்டும் என கூறுகிறார் .