Vetrimaaran: 16 ஆண்டு திரைப்பயணம்.. 6 முத்தான வெற்றிப் படங்கள்... தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் ’வெற்றி’ மாறன்!
2007ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானது முதல், சென்ற 16 ஆண்டுகளில் ஆறே படங்களை இயக்கி கோலிவுட்டின் மிக முக்கியமான, தவிர்க்க இயலாத இயக்குநராக வெற்றிமாறன் உருவெடுத்துள்ளார்.
வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை அனைத்து தரப்பு ரசிகர்களின் மத்தியிலும் அள்ளி வருகிறது.
வெற்றிமாறனின் பயணம்!
இயக்குநர் பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து துணை இயக்குநராக தன் பயணத்தைத் தொடங்கிய இயக்குநர் வெற்றிமாறன், கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் தனுஷுடன் கூட்டணி வைத்து ’பொல்லாதவன்’ படத்தில் இயக்குநராக அறிமுகமானார்.
பொல்லாதவன் படம் வெளிவந்த சமயத்தில் சிறப்பான விமர்சனங்களை பெற முதல் படத்திலேயே கோலிவுட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் வெற்றிமாறன்.
கல்ட் கிளாசிக் ஆடுகளம்
தொடர்ந்து 2011ஆம் ஆண்டு ஆடுகளம் படத்தின் மூலம் தனுஷுடன் மீண்டும் கூட்டணி வைத்த வெற்றிமாறன், ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.
மதுரையை கதைக்களமாகக் கொண்டு வஞ்சம், குரோதம் உள்ளிட்ட உணர்வுகளையும் யதார்த்த வாழ்வியலையும் முன்னிறுத்திய ஆடுகளம் படம், கல்ட் கிளாசிக்காக உருவெடுத்தது. மொத்தம் ஐந்து தேசிய விருதுகளை இந்தப் படம் அள்ள தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வெற்றிமாறன் உருவெடுத்தார்.
காவல் துறையின் கோரமுகம், 80களின் வடசென்னை
தொடர்ந்து 2016ஆம் ஆண்டு விசாரணை படத்தின் மூலம் காவல் துறையின் மற்றொரு பக்கமான கோரமுகத்தைப் பதிவு செய்து கோலிவுட் ரசிகர்களை உறைய வைத்த வெற்றிமாறன், 2018ஆம் ஆண்டு வடசென்னை படத்தில் 80களின் வட சென்னையை காதலும் குரோமும் பொங்க பதிவு செய்து மீண்டும் வெற்றிக்கொடியை தனதாக்கினார் . வட சென்னை 2ஆம் பாகத்தையும் அன்புவின் எழுச்சியையும் கடந்த 4 ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
அசுரன் பேசிய அரசியல்
தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக தனுஷுடன் கூட்டணி அமைத்த வெற்றிமாறன் அசுரன் படம் மூலம் சாதிய படிநிலையின் வலிமிகுந்த பக்கங்கள், படிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ் சினிமாவில் என்றைக்கும் கொண்டாடப்படும் தரமான படைப்புகளில் ஒன்றை வழங்கினார்.
கோலிவுட் தாண்டி மீண்டும் அசுரன் படம் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் வெற்றிமாறனின் ’அசுரன்’ படம் சிறந்த தமிழ் மொழிப்படம், சிறந்த நடிகர் என 2 தேசிய விருதுகளை அள்ளின.
இச்சூழலில், அசுரன் படம் வெளியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விடுதலை படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி வருகிறது.
வெற்றிப்பாதையில் விடுதலை!
பரோட்டா சூரியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முக்கிய காமெடியனாக உருவெடுத்துள்ள நடிகர் சூரியை விடுதலை படத்தில் கதாநாயகனான உயர்த்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.
ஆந்தாலஜி படங்கள், இயக்கம் தாண்டி தயாரிப்பாளர் என வலம் வரும் வெற்றிமாறன், 2007ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானது தொடங்கி, சென்ற 16 ஆண்டுகளில் ஆறே படங்களை இயக்கி கோலிவுட்டின் மிக முக்கியமான மற்றும் தவிர்க்க இயலாத இயக்குநராக உருவெடுத்துள்ளார்.
சமூக பொறுப்புடன் அனைத்து தரப்பினருக்குமான காலம் கடந்து நிற்கும் படங்களை வழங்கி கோலிவுட் ரசிகர்களின் மனங்களை வென்றிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், வெற்றிமுகத்தில் மென்மேலும் பயணிக்க வாழ்த்துகள், பூச்செண்டுகள்!