Vetrimaaran: இயக்குநராவதற்கு முக்கிய தகுதி.. உடல், மன ஆரோக்கியம் முக்கியம்... வெற்றிமாறன் வழங்கிய ஹெல்த் டிப்ஸ்!
“நாம் உடல் அளவில் எவ்வளவு ஃபிட்டாக இருக்கிறோமோ, அது மனதளவிலான தெளிவுக்கும் உறுதுணையாக இருக்கும். இது இந்தத் துறைக்கு மட்டும் தான் என்றில்லை. அனைத்து துறைகளுக்கும் முக்கியம்” - வெற்றிமாறன்
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தினருக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் காப்பீட்டு அட்டை வழங்கும் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.
அப்போது உடல் ஆரோக்கியம், அதற்கான் டிப்ஸ் என வெற்றிமாறன் வழங்கிய அறிவுரையும் கலகலப்பான பேச்சும் பலரையும் ஈர்த்துள்ளது. “ஆரோக்கியத்தை நாம் கடைசியாக வைத்திருக்கிறோம். சத்யஜித்ரே சொன்னதாக பாலுமகேந்திரா சார் என்னிடம் இதை சொன்னார். சத்யஜித்ரே உண்மையில் இதை சொன்னாரா எனத் தெரியாது.
சத்யஜித்ரே சொன்ன தகுதி
ஒரு இயக்குநராவதற்கான முக்கியமான தகுதி என்ன என சத்யஜித்ரேவிடம் கேட்டபோது, “ஒரு இடத்தில் உன்னால் 8 மணி நேரம் நிற்க முடிந்தால் மற்ற எல்லாமே தானாக வந்து சேரும்" எனக் கூறினாராம். அவர் இதிலிருந்து ஃபிட்னெஸ் பற்றி கூறுகிறார்.
நாம் உடல் அளவில் எவ்வளவு ஃபிட்டாக இருக்கிறோமோ, அது மனதளவிலான தெளிவுக்கும் உறுதுணையாக இருக்கும். இது இந்தத் துறைக்கு மட்டும் தான் என்றில்லை. அனைத்து துறைகளுக்கும் முக்கியம். உடல்ரீதியான ஆரோக்கியமே மனரீதியான ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. அது நமக்கு நிறைய தெளிவைத் தரும்.
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் என் நண்பர்கள், என்னுடன் ஒன்றாக வளர்ந்தவர்கள் 40களில் இறக்கிறார்கள். சென்ற மாதம் ஒருவர் இறந்துவிட்டார். ஒரு விஷயம் தான் இதில் இருப்பது. ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆரோக்கியம் குறையலாம், ஆனால் அது நம் கவனக்குறைவால் வரக்கூடாது.
உடல், மன ஆரோக்கியம் முக்கியம்
சிலர் சொல்வார்கள், “அவன் எல்லாம் செஞ்சான் ஆனா அவனுக்கே வந்துடுச்சு” என்பார்கள். ஆனால் நாம் அப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது. எல்லாம் செய்தவனுக்கே இப்படி நடந்துடுச்சேனு தான் நாம எடுத்துக்கணும். நாம முடிஞ்ச அளவுக்கு நம்மள ஆரோக்கியமா வச்சுக்க முயற்சி பண்ணுவோம்.
மன அழுத்தத்துல இருந்து நம்மை வெளியில் வைத்துக் கொள்வது, எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் இருப்பது, ஒரே இடத்தில் அமர்ந்து இல்லாமல், நகர்ந்து கொண்டு இருப்பது, முடிந்தால் ஒரு ட்ரெய்னர் வைத்து ஆலோசனைப் பெற்று நடப்பது இவற்றை செய்யலாம்.
மேலும் முக்கியமாக என்ன சாப்பிடுவது, எவ்வளவு சாப்பிடுவது, எப்பொழுது சாப்பிடுவது என்பது பற்றி கவனமாக இருக்க வேண்டும். இதைத் தெரிந்து, உணர்ந்து செய்தால் நல்லது.
ரீல்ஸ் பார்த்து பின்பற்றாதீங்க
அடுத்தது யூட்யூபில் யார் யாரோ என்னென்னவோ சொல்கிறார்கள். மருத்துவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே சொல்பவற்றை எல்லாம் கேட்டால் அதிர்ச்சியாகவும் பயமாகவும் உள்ளது. டாக்டர் என்று சொல்லிக் கொள்பவர்களும், நியூட்ரிஷியன்ஸ் என்று சொல்லிக்கொள்பவர்களும் சொல்வதை வெறும் 20 நொடி ரீல்களில் பார்த்துவிட்டு செய்யக்கூடாது. முழுமையான புரிதலுடன் நேரில் தொழில்முறை நபர்களிடம் ஆலோசனைப் பெற்று பின்பற்ற வேண்டும்.
சமீபமாக மருத்துவர் ஒருவர் சொல்வதைக் கேட்டேன், எட்டு போட்டு நடப்பது முட்டிக்கு எவ்வளவு பிரச்னை என்பதை அவர் சொல்லிக் கேட்டேன். இது போன்று நிறைய அறிவியல் முறையில் தவறானவற்றை தவிர்த்தாலே நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். இவை எல்லாம் நான் கேட்டு, படித்து தெரிந்து கொண்ட விஷயங்கள். பல துறைகளில் இல்லாத ஹெல்த் இன்சூரன்ஸை சினிமாவில் செய்திருப்பதற்கு பாராட்டுகள்” எனப் பேசினார்.