RIP Actor Dwarakish: பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்... கர்நாடக முதல்வர், ரஜினிகாந்த் இரங்கல்
RIP Actor Dwarakish : பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81.கர்நாடக முதல்வர், முன்னர் முதல்வர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
கன்னட தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக கலைஞராக விளங்கியவர் பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகீஷ். வயது மூப்பு காரணமாக நோயால் அவதிப்பட்டு வந்த அவர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 81.
கன்னட திரைத்துறையில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக இருந்த துவாரகீஷ் மரணம் கன்னட திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். பெங்களூரு ரவீந்திர கலாக்ஷேத்ராவில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற ஏற்பாடுகள் செய்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திரைவாழ்க்கை :
1964ம் ஆண்டு 'வீர சங்கல்பா' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். 1966ம் ஆண்டு தூங்கா பிக்சர்ஸ் என்ற பேனரின் கீழ் 'மம்தாய் பந்தன்' என்ற படத்தை தயாரித்தார். அடுத்ததாக டாக்டர் ராஜ்குமார் மற்றும் இயக்குனர் சித்தலிங்கய்யாவுடன் இணைந்து அவர் தயாரித்த 'மேயர் முத்தண்ணா' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து அவர் தயாரித்த பல படங்கள் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்றன.
பின்னர் இயக்குநராக 1985ம் ஆண்டு களம் இறங்கினார். டான்ஸ் ராஜா டான்ஸ், நீ எழுதிய நாவல் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். அவரின் பல படங்கள் தோல்வியடைந்ததால் பொருளாதார ரீதியாக சரிவை சந்தித்தார். இருப்பினும் பல திறமையான கலைஞர்களை கன்னட சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் நடிகர் துவாரகீஷ்.
கர்நாடக முதல்வர் இரங்கல் :
கர்நாடக முதல்வர் சித்தராமையா , பழம்பெரும் நடிகர் துவாரகீஷ் மறைவுக்கு தன்னுடைய ஆழ்ந்து இரங்கலை தெரிவித்து கொண்டார். அவரின் இரங்கல் பதிவில் "பல ஆண்டுகளாக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல துறைகளில் பங்காற்றிய கன்னட திரையுலகில் தலைசிறந்தவராக 'பிரசாந்த குல்லா' துவாரகீஷ் மறைந்த செய்தி ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. அவரின் இழப்பு கன்னட திரையுலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் இந்த ஆழ்ந்த இழப்பை தாங்கும் வலிமையை பெறட்டும்' என தெரிவித்து இருந்தார்.
முன்னாள் முதல்வர் இரங்கல் :
அந்த வகையில் நடிகர் துவாரகீஷ் மறைவுக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். "அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்த துக்கத்தை தாகும் சக்தியை கடவுள் வழங்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி" என தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் பதிவு :
நடிகர் ரஜினிகாந்த், நடிகர் துவாரகீஷ் மறைவுக்கு சோசியல் மீடியா மூலம் இரங்கலை தெரிவித்துள்ளார். "எனது நீண்ட நாள் நண்பர் துவாரகீஷ் மறைவு எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஒரு காமெடி நடிகராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி ஒரு பெரிய தயாரிப்பாளராகும் இயக்குநராகவும் தன்னை உயர்த்தி கொண்டவர். அவருடைய நினைவலைகள் வந்து செல்கின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என தெரிவித்து இருந்தார்.