Actor SarathBabu: ரஜினி - கமலின் நண்பராக கலக்கிய நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி..! ரசிகர்கள் சோகம்..!
80, 90களில் ரஜினி, கமலின் நண்பர் பாத்திரம் என்றால் இவர் தான் என தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்தார் நடிகர் சரத்பாபு.
பிரபல நடிகர் சரத்பாபு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல நடிகர் சரத்பாபு:
தெலுங்கு, தமிழ் சினிமாக்களில் 70கள் தொடங்கி முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சரத்பாபு. 1977ஆம் ஆண்டு பட்டினப்பிரவேசம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான சரத்பாபு, ஒரு புறம் தேர்ந்தெடுத்த படங்களிலும் மற்றொருபுறம் ரஜினி, கமல் இருவருடனும் பல படங்களில் நடித்தும் தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்றார்.
1973ஆம் ஆணடு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நிழல் நிஜமாகிறது படத்தில் நடிகர் கமலுடன் அறிமுகமானார். மேலும் இந்தியா முழுவதும் பெரும் ஹிட் அடித்த ‘ஏக் துஜே கேளியே’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘மரோ சரித்ரா’ , சலங்கை ஒலி உள்பட தன் தொடக்க காலத்தில் பல படங்களில் நடிகர் கமல்ஹாசனுடன் நடித்துள்ளார்.
ரஜினிகாந்துடன் அசத்தல்:
மற்றொருபுறம் நடிகர் ரஜினிகாந்துடன் முள்ளும் மலரும், நெற்றிக்கண், அண்ணாமலை, முத்து என சூப்பர் ஹிட் படங்களில் நண்பராகக் கலக்கி, ரஜினி, கமலின் நண்பர் பாத்திரம் என்றால் இவர் தான் என ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட இதுவரை கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரத்பாபு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடனும், முக்கிய இயக்குநர்களின் படங்களிலும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி:
தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வரும் சரத்பாபு, இறுதியாக தெலுங்கில் பவன் கல்யாண் உடன் வக்கீல் சாப் படத்திலும் தமிழில் டாக்டர் படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், சரத்பாபுவுக்கு உடல்நிலை சரியில்லாததாகவும் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சரத்பாபு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. முன்னதாக சினிமாவில் இருந்து விலகி ஓய்வெடுத்து வந்த சரத்பாபு ஆந்திராவில் வசித்து வந்தார்.
தற்போது 71 வயதாகும் சரத்பாபு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.