“வெற்றிமாறன் போல் படம் எடுக்கணும்.. ஆனால்...” - மாநாடு இயக்குநர் வெங்கட் பிரபு
இயக்குநர் வெற்றிமாறன் எடுப்பதைப் போல ஆழமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதற்கு நான் விரும்புகிறேன் - வெங்கட் பிரபு
சென்னை 28 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கிய சரோஜா, கோவா, மங்கத்தா உள்ளிட்ட படங்கள் பெரும் ஹிட் ஆனவை. குறிப்பாக வெங்கட் பிரபு படங்கள் என்றாலே ஒரு ஜாலி மூட் இருக்கும் என்ற இமேஜும் கோலிவுட்டில் உண்டு.
இவர் சமீபத்தில் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கினார். தடைகளை தாண்டி வெளியான இப்படம் சென்சேஷ்னல் ஹிட் ஆனது. டைம் லூப் கான்செப்ட்டை தமிழுக்கு முதலில் அறிமுகப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்ததற்கு வெங்கட் பிரபுவுக்கும் அவரது குழுவுக்கும் பலர் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.
இதனையடுத்து வெங்கட் பிரபு அடுத்ததாக என்ன படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. அவர் அடுத்ததாக தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரின் கதையை இயக்க இருக்கிறார். படத்துக்கு மன்மத லீலை என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “‘மாநாடு’ வெற்றி என் சினிமா வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பூஸ்டர். ‘சென்னை 28 பார்ட் 2’ வெற்றிப்படம்தான். இருந்தாலும் அதன் பிறகு ஏற்பட்ட இடைவெளி மிகப்பெரியது. நமது படம் பார்வையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கு, விநியோகஸ்தர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தால் அதை விட சிறந்த விஷயம் வேறு எதுவும் இல்லை.
நல்ல விமர்சனம் என்பது இன்னுமொரு போனஸ். விநியோகஸ்தர்கள் அனைவரும் இப்படத்தால் தங்களுக்கு லாபம் என்று என்னிடம் சொல்லும்போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ‘சென்னை 28’,‘மாநாடு’,‘மங்காத்தா’போன்ற படங்கள் ஒரு இயக்குநரின் வாழ்வில் அமைவது அரிதிலும் அரிது.
‘மாநாடு’ படத்துக்குப் பிறகு முன்னணி இயக்குநர்களான ஷங்கர், அட்லி, கே.எஸ்.ரவிகுமார், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் என பலரும் என்னைத் தொடர்புகொண்டு வாழ்த்தினர். மாநாடு திரைப்பட வெற்றிக்குப் பிறகு பல முன்னணி கதாநாயகர்கள் புதுவிதமான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அது மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படம்தோல்வி அடைந்திருந்தால் நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும்.
விரைவில் வெளியாகவிருக்கும் ‘மன்மத லீலை’ படம் இதுவரை நான் செய்யாத புது முயற்சியாக இருக்கும். இயக்குநர் வெற்றிமாறன் எடுப்பதைப் போல ஆழமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதற்கு நான் விரும்புகிறேன். ஆனால், அதுவும் என் பாணியில்தான் இருக்கும்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்