Vanitha Vijayakumar: இந்த நாளுக்காக தான் காத்திருந்தேன்! ரஜினி அங்கிளுக்கு நன்றி! மகனை நினைத்து பூரித்து போன வனிதா...
Vanitha Vijayakumar : வனிதா விஜயகுமார் தனது மகன் விஜய் ஸ்ரீ ஹரி ஹீரோவாக அறிமுகமாக இருக்கும் 'மாம்போ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்ததும் நெகிழ்ச்சியுடன் மகனை வாழ்த்தி போஸ்ட் பகிர்ந்துள்ளார்.
புது விதமான கதைகளின் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் அற்புதமான ஒரு அனுபவத்தை கொடுக்க கூடிய தனித்துவமான இயக்குநர் பிரபு சாலமன். அவரின் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் அவர் என்ன சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு மனதில் மேலோங்கி இருக்கும். அந்த வகையில் தற்போது அவர் இயக்க இருக்கும் படத்திலும் ஒரு புதுமையை கொண்டு வருகிறார்.
அமலா பால், வித்தார்த், கயல் ஆனந்தி, விக்ரம் பிரபு போன்ற பல நடிகர் நடிகைகளை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திய பிரபு சாலமன் தற்போது அறிமுகப்படுத்த உள்ள நடிகர், நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீ ஹரி. அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. விஜய் ஸ்ரீ ஹரி சிங்கக்குட்டியுடன் விளையாடுவது போன்ற புகைப்படம் அதில் இடம்பெற்றுள்ளது. படத்திற்கு 'மாம்போ' என பெயரிடப்பட்டுள்ளது.
கும்கி படத்தில் யானையை வைத்து படமாக்கிய பிரபு சாலமன் இந்த படத்தின் நிஜ சிங்கக்குட்டியை வைத்து படமாக்க உள்ளார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் தாய்லாலாந்தில் நடைபெற உள்ளது என கூறப்படுகிறது.
மகன் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதை நினைத்து பூரித்து போன நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் நெகிழ்ச்சியான போஸ்ட் பகிர்ந்து மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
"என் மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரிக்கு வாழ்த்துக்கள். அழகியலை படமாக்கும் பிரபு சாலமன் இயக்கும் படத்தில் நீ அறிமுகமாகிறாய். உன்னை வழிநடத்திய ரஜினிகாந்த் அங்கிளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். நான் இந்த பதிவை பகிரும் போது என்னுடைய கண்கள் கலங்குகின்றன. என்னுடைய அன்பும் பிரார்த்தனையும் என்றும் உனக்காக இருக்கும் "
View this post on Instagram
"என்னுடைய குழந்தை இப்போது ஹீரோவாகிவிட்டான். ஊடக மற்றும் பத்திரிகை குடும்பம் மற்றும் என்னுடைய தம்பி தங்கைகள் அனைவரும் எனக்கு அளித்த ஆதரவு போலவே என்னுடைய மகனுக்கு அன்பையும், ஆசீர்வாதத்தையும் வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். என்னுடைய மகன் விஜய் ஸ்ரீ ஹரியை நினைத்து சந்தோஷமும் பெருமையும் அடையும் தினம் நிச்சயம் வரும் என எனக்கு தெரியும். கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் அவனுக்கு இருக்கும்" என வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலம் நெகிழ்ச்சியான போஸ்ட் பகிர்ந்து இருந்தார்.