வள்ளுவன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா...பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து
வள்ளுவன் பட இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே செல்வமணி, இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் கே ராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் கதாநாயகியாக நடித்த ஆஸ்னா சவேரி இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.மனோபாலா, சாய் தீனா, தீபா, ராமச்சந்திரன் (ராம்ஸ்) கராத்தே ராஜா, ராஜசிம்மன், மீசை ராஜேந்திரன், சில்மிஷம் சிவா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஸ்வத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுரேஷ் பாலா மேற்கொள்ள படத்தொகுப்பை ஷான் லோகேஷ் கவனித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸுக்குத் தயாராகி வரும் நிலையில்,இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி, இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் கே ராஜன், நடிகை கோமல் சர்மா, நடிகர் விஜய் விஷ்வா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இயக்குநர் சங்கர் சாரதி பேசும்போது
"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்” என்கிற இந்த திருக்குறளை மையப்படுத்தி தான் கமர்சியல் கிரைம் த்ரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறேன். அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணல் அம்பேத்கர் சட்டங்களை இயற்றினார். ஆனால் சட்டங்களில் உள்ள நல்ல விஷயங்களை ஒதுக்கி விட்டு அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பிக்கும் வழி வகைகளைத் தான் இன்று தேடுகிறார்கள். மக்களைப் பாதுகாக்க யாரிடம் இந்த சட்டங்களை ஒப்படைத்தார்களோ அவர்கள் தான் இன்று நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் தவறு செய்தால் யார் தண்டனை கொடுப்பது ? இதனால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வலியையும், வேதனையையும் தான் வள்ளுவன் படமாக உருவாக்கி இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நம் குடும்பத்தில் பலரும் சந்தித்த வலிகளைத் தான் ஸ்கிரிப்ட் ஆக மாற்றி இருக்கிறேன். "இந்த கதை நடிகர் பரத்திற்காகவே உருவாக்கப்பட்டது. அவரிடம் சென்று கூறினேன். கதை பிடித்திருந்தாலும் அப்போது அவர் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் எனக்கு தேதி கிடைக்கவில்லை. இப்போது இந்த படத்தை பாராட்ட அவரே மேடையில் வந்து இருப்பது அமர்ந்திருப்பதை கடவுள் செயல் என்றே நினைக்கிறேன்” என்று பேசினார்.
இணை தயாரிப்பாளர் பாலச்சந்தர் பேசும்போது
இந்த படத்தை ஆரம்பிக்கும்போது இது முடியுமா? என்று யோசித்தோம். ஆனால் இப்போது இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது பாதி ஜெயித்து விட்டோம் என நினைக்கிறேன். இந்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களை எடுப்போம். தமிழ் சினிமாவை வாழ வைப்பதற்காகத் தான் வந்திருக்கிறோம். முதலில் கன்னடத்தில் தான் படம் எடுக்க நினைத்தோம். ஆனால் இங்கே தமிழில் செல்வமணி சார் போன்ற ஜாம்பவான்கள் முன்னால் பெப்சி தொழிலாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் இங்கே படம் எடுத்தோம்” என்று பேசினார்.
இசையமைப்பாளர் அஸ்வத் பேசும்போது
“படத்தின் நாயகன் சேத்தன் சீனு மூலமாகத்தான் இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தயாரிப்பாளர்கள் திறமையான நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று உற்சாகப்படுத்தினார்கள். அந்தவகையில் இந்த படத்தில் நிறைய பாடகர்கள், கவிஞர்கள் என புதியவர்கள் பலரை அறிமுகப்படுத்த முடிந்தது” என்று பேசினார்.
நடிகர் விஜய் விஷ்வா பேசும்போது
“இயக்குநர் சங்கர் சாரதி இந்த படத்தை பல சிரமங்களுக்கு இடையே பார்த்து பார்த்து உருவாக்கினார். இன்று இந்த டிரைலரை பார்க்கும்போது அவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு விடிவு கிடைத்தது போல இருக்கிறது. கதாநாயகி எங்கள் தமிழ்நாட்டு ஐஸ்வர்யா ராய் என்று சொல்லலாம். தயாரிப்பாளர்களைப் பொருத்தவரை, படம் எப்படி வேண்டுமானாலும் எடுங்கள்.. வந்தவர்கள் யாருக்கும் சாப்பாட்டில் குறை வைத்து விடாதீர்கள் என்று தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள். சம்பளம் சரியான நேரத்தில் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இந்த படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்து மிஸ் ஆனது. இவர்களின் அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறினார்.
*நடிகர் கராத்தே ராஜா பேசும்போது,*
“இந்த வள்ளுவன் படத்தில் எனக்கு ஒரு மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சங்கர் சாரதி. இதில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நான் பல கிராமங்களில், சிறிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் திங்கள், செவ்வாய் போன்ற கிழமைகளில் காலை, மதிய காட்சிகள் படம் பார்க்க செல்லும் போது வெறும் ஐந்து பேர், பத்து பேர் மட்டும் இருப்பதை பார்க்கும்போது மனம் பதறும். பல இடங்களில் திரையரங்குகளை எடுத்துவிட்டு மண்டபம், மால் கட்ட ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் மூணாறுக்கு சுற்றுலா சென்று இருந்தேன்.. அவ்வளவு பெரிய சுற்றுலா தளம்.. ஆனால் அவ்வளவு பெரிய ஊரில் ஒரு தியேட்டர் கூட இல்லை. அதேபோல பொதுமக்களிடம் ஏன் திரையரங்குகளுக்கு செல்வதில்லை என நான் பேசியபோது பலரும் நாங்களே வெளியில் இருந்து தின்பண்டம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்பதை பார்க்க முடிந்தது. திரையரங்குகளில் அதிக கட்டணத்தில் தின்பண்டங்களை விற்பது ஒரு பக்கம் விற்றுக் கொள்ளட்டும். ஆனால் வெளியில் இருந்து இப்படி கொண்டு வருபவர்களையும் அனுமதிக்கட்டும். அதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பதை பார்த்து அதை களைய முயற்சி எடுத்தால் அந்த ஜனங்களும் திரையரங்கிற்கு சென்று நமது படத்தை பார்ப்பார்கள். அப்படி வெளியிலிருந்து தின்பண்டங்களை அனுமதிக்கவில்லை என்றால் திரையரங்குகளில் விற்கும் பொருட்களை எம்.ஆர்.பி விலைக்கே விற்க வழி வகுக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்தாலும் எனக்கு சந்தோசம்” என்று பேசினார்.
*நடிகர் ராஜசிம்மன் பேசும்போது,*
இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தபோது பல கஷ்டங்களுக்கு இடையே தான் நடைபெற்றது. தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநருக்கும் எங்களைப் போன்ற நடிகர்களாகட்டும் அவரவர் தரப்பில் சில கஷ்டங்கள் இருந்தன. அப்படி கஷ்டங்களுக்கு இடையே தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும்போது எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. வெளிப்படையாக சொன்னால் இந்த படம் இப்படி இந்த அளவுக்கு வரும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை வாழ வைப்பதற்காக நாங்கள் வந்திருக்கிறோம் என்று சொன்னது தவறான அர்த்தத்தில் இல்லை. தமிழில் நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தான் அப்படி அவர்கள் வெளிப்படுத்தினார்கள். யாரும் அதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நடிகர்கள் எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறார்கள் என இங்கே சிலர் பேசினார்கள். எல்லோருக்கும் அப்படி அல்ல.. கொரோனா காலகட்டத்தில் நான் கோயம்பேடு மார்க்கெட்டில் நடத்தி வந்த ஹோட்டலில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தேன். என் காது படவே சில பேர் அதை விமர்சித்து பேசுவார்கள். அதனால் பொத்தாம் பொதுவாக நடிகர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என சொல்ல வேண்டாம். அவர்களுக்கும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி பிரச்சனைகள் இருக்கிறது. நான் இங்கே இல்லாதவர்களுக்கு உணவு வழங்குவதில் கூட சிக்கல் இருக்கிறது. அதையும் நான் எதிர்கொண்டு செய்துதான் வருகிறேன்” என்று பேசினார்.
நடிகர் பிரேம்குமார் பேசும்போது
“படத்தின் இயக்குநர் என்னிடம் இந்த கதையை சொல்ல வந்தபோது இந்த படம் ஒரு க்ரைம் திரில்லர்.. இந்த படத்திற்கு வள்ளுவன் என்று டைட்டில் வைத்திருக்கிறேன் என்று சொன்னபோதே நான் இதில் நடிக்க ஓகே சொல்லி விட்டேன். இந்த படத்தில் ஒரு அழுத்தமான செய்தி இருக்கிறது. படம் பார்த்துவிட்டு வரும்போது ஒரு தாக்கம் இருக்கும். அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் எவ்வாறு தவறு செய்கிறார்கள், அதை எப்படி தட்டிக் கேட்பது என அதற்கான தீர்வுகளும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது” என்று பேசினார்.
இயக்குநர் ராதா பாரதி பேசும்போது
“இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். இந்த படத்தில் நடித்துள்ள இந்த நடிகர்களை அந்த கதாபாத்திரங்களாக நீங்கள் பார்க்கும் போது, ரொம்பவே பெருமைப்படுவீர்கள். குறிப்பாக கதாநாயகியைப் பார்த்து பயப்படுவீர்கள். இயக்குநர் சங்கர் சாரதி என்னுடைய சீடன் தான். யாருக்கும் தெரியாத விஷயம், அவர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர். தேவாரம், திருப்புகழ், திருப்பாவை எல்லாம் தெளிவாகப் பாடக்கூடியவர். என் தந்தை அவரை ஆழ்வார் என்று தான் அழைப்பார். அவ்வளவு பக்திமான். அதேசமயம் என்னிடம் சமூகம் சார்ந்த சீர்திருத்த கருத்துக்கள் பற்றி எப்போதும் பேசிக் கொண்டிருப்பார். பரிமேலழகர், கலைஞர் போன்றவர்கள் திருக்குறளுக்கு தெளிவுரை எழுதினார்கள். இயக்குநர் சங்கர் சாரதி திருக்குறளுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்” என்று பேசினார்.
நடிகை கோமல் சர்மா பேசும்போது
“2000 வருடத்திற்கு முன்பு உலகமே இருளில் சூழ்ந்து இருந்தபோது 1330 குறள்கள் மூலம் வெளிச்சம் கொடுத்தவர் வள்ளுவர். நமது குழந்தைகள் மாதத்திற்கு 10 குறள்களாவது படித்தால் அவர்கள் சிறந்த மனிதர்களாக மட்டுமல்ல, உயர்வான தலைவர்களாகவும் மாறுவார்கள். திருக்குறள் ஒரு இலக்கியம் மட்டுமல்ல.. அது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதையும் கற்றுக் கொடுக்கிறது. தினசரி பள்ளிகளில் பிரார்த்தனை நேரத்தின் போது ஒரு திருக்குறளையும் சேர்த்துக் கொள்ளலாம். திருக்குறள் உலகத்திற்கு எப்போதுமே ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. அதை நான் முழுமையாக நம்புகிறேன். இளைஞர்கள் திருக்குறளை மனதில் சுமந்தால் அவர்களுக்கு பேராசையோ, கெட்ட எண்ணமோ மனதில் தோன்றாது. சமூகத்தின் தலையெழுத்தையே அவர்களால் மாற்ற முடியும்” என்று பேசினார்.
*தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் பேசும்போது,*
“நான் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஆன சமயத்தில் தான் இதே போன்று பீட்சா படத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். அந்தப் படத்தில் நடித்த விஜய் சேதுபதி உள்ளிட்ட எல்லோருமே பெரிய ஆட்களாக மாறிவிட்டார்கள். அதேபோலத்தான் இந்த வள்ளுவன் திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் அதேபோன்று பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
வள்ளுவன் படத்தின் தயாரிப்பாளர் ஷைல் குமார் பேசும்போது
“நான் இந்த படத்தை தயாரிக்க உறுதுணையாக இருந்தது என்னுடைய தாய் தந்தை தான். அதேபோல நான் வெளிநாட்டில் இருந்தாலும் கூட படத்தின் வேலைகள் தடைபடாமல் இங்கிருந்து என்னுடைய நண்பரான பாஸ்கரன் பார்த்துக் கொண்டார். அவர்களுக்கு நன்றி” என்று கூறினார்.





















