Usha Uthup: இந்திய பாப் குயின், பாடகி உஷா உதுப்பின் கணவர் மாரடைப்பால் உயிரிழப்பு!
Usha Uthup Husband Passed Away: உஷா உதுப்பின் மகள் அஞ்சலி உதுப் தன் தந்தை ஜானி சாக்கோவின் மறைவு குறித்து உருக்கமான பதிவினை தன் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ், இந்தி என பல மொழிகளில் கலக்கி வரும் பிரபல மூத்த பாடகி உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ உதுப் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கொல்கத்தாவில் உயிரிழப்பு
பாப் பாடகியாக அறிமுகமாகி இந்திய சினிமாவில் தன் கர்ஜிக்கும் குரல் மற்றும் பர்சனாலிட்டியுடன் வலம் வந்து ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் பாடகி உஷா உதுப். மும்பையைக் சேர்ந்த தமிழ் குடும்பத்தைச் சார்ந்தவரான உஷா உதுப், இந்தி சினிமாவில் பின்னணிப் பாடகியாக தன் பயணத்தைத் தொடங்கி பின் தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார். எம்.ஜிஆரின் இதயக்கனி தொடங்கி, இளையராஜா இசையில் அஞ்சலி படப்பாடல், தமிழ் சினிமாவில் நடிப்பு, இசை நிகழ்ச்சியில் ஜட்ஜ் என தமிழ் ரசிகர்களின் மத்தியில் பரிட்சயமானவர்.
சமீபத்தில் பத்மபூஷண் விருது பெற்ற உஷா உதுப், இந்திய சினிமாவின் பாப் குயின் எனக் கொண்டாடப்படுகிறார். கொல்கத்தாவில் தன் கணவர், மகன், மகளுடன் உஷா உதுப் வசித்து வந்த நிலையில் உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ உதுப் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 78.
உஷா உதுப்பின் இரண்டாவது கணவர்
வீட்டில் வழக்கமாக ஜானி உணவருந்திவிட்டு அமர்ந்திருந்த நிலையில், திடீரெனெ அவர் உடல் வியர்த்து சுயநினைவை இழந்ததாகவும், தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மாரடைப்பு காரணமாக வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 70களில் உஷா உதுப்பை மேடை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து அவருடன் ஜானி காதல்வயப்பட்ட நிலையில் பின் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஜானி சாக்கோ உஷா உதுப்பின் இரண்டாவது கணவர் ஆவார்.
இந்நிலையில் உஷா உதுப்பின் மகள் அஞ்சலி உதுப் தன் தந்தை மறைவு குறித்து உருக்கமான பதிவினை தன் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
திரைத்துறையினரும் சினிமா ரசிகர்களும் ஜானி சாக்கோவுக்கு இந்தப் பதிவில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.