'மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும்' - கோவை மாநகர காவல் ஆணையாளரரிடம் திருநங்கை புகார்
மார்க் ஆண்டனி திரைப்படத்தில் திருநங்கைகள் மற்றும் எல்.ஜி.பி.டி. சமூக மக்களை அவமதிக்கும் விதமாக சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
கோவையை சேர்ந்த திருநங்கை ஜாஸ்மின் மதியழகன் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் எஸ். ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் திருநங்கைகள் மற்றும் எல்.ஜி.பி.டி. சமூக மக்களை அவமதிக்கும் விதமாக சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட காட்சிகள் திருநங்கைகளை கேளிக்கை பொருளாகவும் நகைச்சுவையாகவும் அவமானப்படுத்துவதாக இருப்பதாகவும், இது போன்ற திரைப்படங்களினால் திருநங்கைகளின் முன்னேற்றம் 10 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்படும் எனவும் கூறியுள்ளார். எனவே இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் அல்லது திருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும். இத்திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மார்க் ஆண்டனி திரைப்படத்தில் திருநங்கைகள் பாலியல் உறவுக்காக அலைவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், ஒய்.ஜி மகேந்திரனை திருநங்கை போல் காட்டி எவ்வித நேர்மறையாகவும் காட்டாமல் விட்டுவிட்டதாக தெரிவித்தார். மேலும் சில இடங்களில் ஆண்கள், திருநங்கைகள் போல் வேடமிட்டு விஷாலை கொலை செய்வதற்கு வருவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறினார். திருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. நகைச்சுவை என்ற பெயரில் திருநங்கைகளை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது. தற்போது வரை இந்த சமுகத்தில் திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் வார்த்தைகள் எல்லாம், திரைப்படங்களில் இருந்து தான் மக்களிடம் போய் சேர்கிறது என தெரிவித்த அவர், பலரும் தங்களை படத்தை படமாக பாருங்கள் என கூறுகிறார்கள் எனவும் எங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகள், உரிமைகளை வழங்கிவிட்டு இதனை கூறுங்கள் எனத் தெரிவித்தார்.
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரின் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா, செல்வராகவன், ஒய்.ஜி.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மார்க் ஆண்டனி’. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15ம் தேதியன்று உலகமெங்கும் வெளியானது. ஏற்கனவே மார்க் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், படமும் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளதாக விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. 1980 மற்றும் 1990 களில் பிரபலமான பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்தது தொடங்கி மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை ரீ-கிரியேட் செய்தது வரை ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது மார்க் ஆண்டனி படம். இந்த நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மீது திருநங்கை ஒருவர் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.