Loki Release Date: மார்வெல் ரசிகர்களே தயாரா..! லோகி வெப் சீரிஸின் சீசன் 2 வெளியீட்டு தேதி அறிவிப்பு
மார்வெல் நிறுவனத்தின் லோகி வெப் சீரிஸின் சீசன் இரண்டிற்கான வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மார்வெல் நிறுவனத்தின் லோகி வெப் சீரிஸின் சீசன் இரண்டிற்கான வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லோகி சீசன் 2 வெளியீட்டு தேதி:
தோர் மற்றும் அவெஞ்சர்ஸ் படங்கள் மூலம் பிரபலமான லோகி கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள, வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் வரும் அக்டோபர் 6ம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என மார்வெல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதோடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 10 விதமான லோகி கதாபாத்திரங்கள் நேரமின்றி அவசர அவசரமாக, மிஸ் மினிட்ஸ் எனப்படும் சிறிய கடிகாரத்திற்குள் ஓடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. கடந்த ஓராண்டாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்த லோகி சீசன் 2ன் வெளியீட்டு தேதி உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதோடு, விரைவில் லோகி சீசன் இரண்டிற்கான டிரெய்லர் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஃபினிட்டி சாகா:
அமெரிக்காவின் பழமையான காமிக்ஸ் நிறுவனமான மார்வெல் அதளபாதாளத்தில் சிக்கியிருந்த நிலையில், கையிலிருந்த பணத்தை எல்லாம் கொட்டி இதுவே எங்களின் கடைசி முயற்சி என எடுத்த திரைப்படம் தான் அயர்ன் - மேன். அந்த படம் கொடுத்த பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பல்வேறு படங்களை தந்து இன்ஃபினிட்டி சாகா எனும் ஒரு பெரும் சகாப்தத்தை நிறைவு செய்தது.
லோகி சீசன் 2 போஸ்டர் (courtesy: marvel)
லோகி சீசன் 1:
அதன் தொடர்ச்சியாக தற்போது மல்டிவெர்ஸ் சாகா எனும் பெயரில் திரைப்படங்களுடன், வெப்சீரிஸ்களையும் வழங்கி வருகிறது. அதில், ஆண்டி - ஹீரோவான லோகி கதாபாத்திரத்தை கொண்டு கடந்த 2021ம் ஆண்டு வெளியான லோகி வெப் சிரிஸ் ரசிகர்கள் இடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதில் லோகியுடன் அவரது வேரியண்டான சில்வி கதாபாத்திரத்தை மையமாக கொண்டு, கேங் எனும் மிகப்பெரும் வில்லனை மார்வெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதோடு, மார்வெல் சினிமாடிக் யுனிவெர்ஸிள், மல்டிவெர்ஸ் என்ற கோட்பாடு எப்படி செயல்படுகிறது எனவும் தெளிவாக விளக்கப்பட்டு இருந்தது.
முக்கிய கதாபாத்திரங்கள்:
லோகி சீசன் ஒன்றில் இடம்பெற்ற டாம் ஹிடல்சன், ஓவென் வில்சன், சோபியா டி மார்டினோ மற்றும் குகு பாதா ராவ் ஆகிய முக்கிய கதாபாத்திரங்கள் இரண்டாவது சீசனிலும் இடம்பெறுகின்றனர். அவர்களோடு, TVA அமைப்பை ஆளும் கேங் மீண்டும் வருவாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
என்ன எதிர்பார்க்கலாம்:
முதல் சீசனின் கிளைமேக்ஸில் HE WHO REMAINS எனும் கேங்கின் வேரியண்டை சில்வி கொலை செய்து இருப்பார். அதேநேரம், லோகி TVA அமைப்பிற்கு திரும்பியபோது, மோபியஸ் உள்ளிட்டோர் பழைய நினைவுகளை இழந்து இருப்பதையும், TVA அமைப்பின் மையப்பகுதியில் கேங்கின் பிரமாண்ட சிலை நிறுவப்பட்டு இருப்பதையும் கண்டு ஷாக் ஆகும்படி கதை முடிந்திருக்கும். இதையடுத்து, HE WHO REMAINS கொல்லப்பட்டதால் சேக்ரட் டைம்லனில் ஏற்பட்டுள்ள பல்வேறு கிளைகளை தடுப்பது, அதனால் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்வது ஆகியவற்றுடன் மோபியஸ் கதாபாத்திரம் தொடர்பாகவும் லோகி சிசன் இரண்டில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

