Thug life: கமல் பேசுனது எங்கப்பா பேசுனது மாதிரி இருந்துச்சு.. மேடையிலே சிவராஜ்குமார் உருக்கம்
கமல்ஹாசன் சார் என்னுடன் போனில் பேசும்போது எனது அப்பாவுடன் பேசியது போல இருந்தது என்று சிவராஜ்குமார் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னட திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரமான சிவராஜ்குமார் பங்கேற்றார். அவர் பேசியதாவது,
மிகப்பெரிய ரசிகன்:
அனைவருக்கும் வணக்கம். எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. உங்கள் அனைவருக்கும் எப்படி ரசிகர்கள் தருணமோ? எனக்கும் அப்படி ரசிகர்கள் தருணம்தான். நான் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகன். முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.
கமல் சார் என்றால் உயிர். அவரின் சிரிப்பு பிடிக்கும். அவரின் கண்கள் பிடிக்கும். அவரின் குணாதிசயங்கள் பிடிக்கும். ஒருநாள் வீட்டிற்கு கமல் சார் வீட்டிற்கு வந்திருந்தார். அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தார். நான் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்ப கேட்டாரு? யாரு இது. என் பையன்தான்னு அப்பா சொன்னாரு.
ரசிகனாவே இருப்பேன்:
கைகொடுத்தாரு. ஒரு தடவை உங்களை கட்டிப்பிடிச்சுக்கலாமா? என்று கேட்டேன். 3 நாள் குளிக்கல. சத்தியமா. அந்த மாதிரி ஒரு பெரிய ரசிகன். சண்டை போட்ருக்கேன். நல்லா இல்லனாலும் நல்லா இருக்குனு சொல்லுவேன். அந்த மாதிரி ஒரு ரசிகன். நான் அவரோட படத்திற்கு ரசிகனா வந்திருப்பதை ஒரு பெருமையா நினைக்கிறேன்.
ராஜ்கமல் என்டர்பிரைசஸ்க்கு முதல் படமான ராஜபார்வையை அப்பாதான் ( ராஜ்குமார்) கிளாப் பண்ணி தொடங்கி வச்சாரு. அப்போ இருந்து இந்த தொடர்பு விட்டுப்போகல. இன்னும் எத்தன வருஷம் நாங்க இருக்கோமா அப்ப வரை தொடர்ந்துகிட்டே இருக்கும். நான் கமல்ஹாசன் ரசிகனாவே இருப்பேன். ஏன் எனக்கு அவரை இந்தளவு பிடிக்கும்னு தெரியல.
அப்பா கூட பேசுன மாதிரி இருக்குது:
இப்போ கூட பாருங்க. எவ்வளவு அழகா இருக்காருனு. நான் மியாமியில் ஆபரேஷன் முடிச்சுட்டு இருந்தேன். கமல்ஹாசன் போன் பண்ணாரு. அவரு அப்போ சிகாகோவுல இருந்தாரு. ஒன்னும் கவலைப்படாதீங்க சிவண்ணானு சொன்னாரு. எனக்கு ரொம்ப சந்தோஷம். எனக்கு கண்ணீரே வந்துடுச்சு. நான் அதை மறக்கவே மாட்டேன். எங்க அப்பா என்கூட பேசுன மாதிரி இருந்துச்சு. நேர்மையா சொல்றேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டாராக திகழும் சிவராஜ்குமார் தமிழில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். அந்த படத்திற்கு பிறகு இவர் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம் அடைந்தார். மேலும், இவர் கமல்ஹாசனுக்காக அவரது பாடலான ஒரே நாள் உனை நான் என்ற பாடலை மேடையில் பாடி அசத்தினார்.
மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்புவுடன் இணைந்து நாசர், த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், அபிராமி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.





















