Samyuktha on Prabhu Deva | பைக் ஓட்டும்போது எதிர்பாராதவிதமா அப்படி ஆகிடுச்சு.. பிரபுதேவா குறித்து சம்யுக்தா ஓப்பன் டாக்
பிரபு தேவா சாருடன் நடனம் ஆடாமல் வேறெந்த படத்திலும் நடனமாடக்கூடாது என உறுதி எடுத்துள்ளதாக பிக் பாஸ் புகழ் சம்யுக்தா கூறியுள்ளார்.
பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள “தேள்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, இன்று திரைபிரபலங்கள் மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள் முன்னிலையில், சென்னையில் நடைபெற்றது. STUDIO GREEN நிறுவனம் சார்பில் K.E. ஞானவேல் ராஜா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இயக்குநர் A ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவா, ஈஸ்வரி ராவ் இருவரும் அம்மா, மகனாக நடித்துள்ளனர். C.சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நிகழ்வில் பிரபுதேவா கலந்து கொண்டு பேசியதாவது, “ இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பை ரசிகர்கள் இது செட்டா இல்லை ஒரிஜினல் லொகேஷனா என சந்தேகப்படும் அளவு அற்புதமாக இயக்கம் செய்துள்ளார்கள்.
தனஞ்செயன் சாருக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். படத்தின் முழு டப்பிங்கையும் அரை நாளில் முடித்துவிட்டேன். இசையமைப்பாளர் சத்யா எனது பள்ளி கெமிஸ்ட்ரி ஆசிரியரை ஞாபகப்படுத்தினார்.அவர் இப்படத்திற்கு மிக சிறப்பான இசையை தந்துள்ளார். அவரும் நானும் பல படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறோம். ஒரு தயாரிப்பாளராக K.E. ஞானவேல் ராஜா மிக அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.
ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன். நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை செக் செய்து கொண்டே இருப்பார் இயக்குநர். நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார். ஈஸ்வரி மேடம் தமிழில் மிகச்சிறந்த நடிகைகளுள் ஒருவராக திகழ்கிறார். சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார்.
நடிகை சம்யுக்தா கூறியதாவது, “இங்கு திரையிடப்பட்ட பாடலை படமாக்கும்போது நான் ஆக்ஸிடெண்டில் மாட்டிக்கொண்டேன். மைசூரில் பைக் ஓட்டும்போது எதிர்பாராதவிதமாக அது நடந்துவிட்டது. பிரபுதேவா சார் அவரது பிஸியான நேரத்திலும் என்னை ஓய்வெடுக்க சொல்லி, ஒரு மாதம் கழித்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்போது வரையிலும் நான் 8 படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் ஒரு படத்திலும் எனக்கு டான்ஸ் இல்லை.
பிரபு தேவா சாருடன் முதல் வாய்ப்பை நான் மிஸ் செய்து விட்டேன். இது எனக்கு இரண்டாவது வாய்ப்பு. பிரபு தேவா சாருடன் நடனம் ஆடாமல் வேறெந்த படத்திலும் நடனமாடக்கூடாது என உறுதி எடுத்துள்ளேன். விரைவில் அவருடன் நடனமாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்தப்படத்தில் நடித்தது மிக உற்சாகமான அனுபவமாக இருந்தது. என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.” என்று கூறினார்.