சிம்பு பட பஞ்சாயத்து ஓவர்; வெளியாகிறது ‛மஹா’
சிம்பு நடித்த ‘மஹா’ படத்தை இயக்கிய இயக்குநர் உபைத் ரஹ்மான் ஜமீலுக்கு வழங்க வேண்டிய பாக்கி சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் வழங்கியது.
சிம்பு நடித்த ‘மஹா’ படத்தை இயக்கிய இயக்குநர் உபைத் ரஹ்மான் ஜமீலுக்கு செலுத்தப்பட வேண்டிய எஞ்சிய சம்பளம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவான ‘மஹா’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் யு.ஆர்.ஜலீல் என்கிற உபைத் ரஹ்மான் ஜமீல் இயக்கி இருந்தார். இந்தப்படத்தில் துணைக்கதாபாத்திரங்களில் நடிகர்கள் கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரித்தார். ‘மஹா’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், படத்தின் இயக்குநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், “ கதைப்படி விமான பணிப்பெண்ணாக வரும் கதாநாயகி ஹன்சிகா, பைலட் ஜமீலாக வரும் சிம்புவை காதலிக்கிறார். இவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை கொல்லப்படுகிறது. அதை கதாநாயகி கண்டுபிடிப்பது தான் கதை. ஆனால் தற்போது கதைக்கு தேவையில்லாத காட்சிகள் எனது உதவி இயக்குநரை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
எனக்குத்தெரியாமல் படம் எடிட் செய்யப்பட்டு, வெளியிட முயற்சிகள் நடந்து வருகின்றன. ‘மஹா’ படத்தை இயக்க எனக்கு தயாரிப்பு நிறுவனம் 24 லட்சம் ரூபாய் தருவதாக கூறியது. ஆனால் தற்போது எனக்கு 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் மீதமுள்ள 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் என் கதைக்கருவை வேறு சிலரை வைத்து படத்தை முடித்ததற்காக எனக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை ஏற்று விசாரணை நடத்திய நீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்கும் படி எட்செட்ரா தயாரிப்பு நிறுவனத்துக்கும், உதவி இயக்குனர் அஞ்சு விஜய் மற்றும் படத் தொகுப்பாளர் ஜான் ஆப்ரஹாம் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர்கள் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் இயக்குநருக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியில் 5.50 லட்சத்தை தயாரிப்பு நிறுவனம் தர ஒப்புக்கொண்டது. அதற்கு இயக்குநரும் சம்மதம் தெரிவித்தார்.
பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டதால், படத்தை ஓடிடியில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருதாக நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் தங்களுடைய தரப்பை இருதரப்பினரும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு தொடர்பான விசாரணையை ஜூன் 28 ஆம் தேதி தள்ளிவைத்தார். இந்தநிலையில் தற்போது இயக்குநருக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.