ரஜினி மாதிரி ஒருத்தர என் வாழ்க்கைல பார்த்தது இல்ல; என்னா மனுஷன்ங்க அவரு... : இயக்குநர் செந்தில்நாதன்!
எப்போ ஷூட்டிங்ன்னு உடனே கேட்டார், சார் நீங்க சொல்ற தேதிலதானே சார் வைக்க முடியும்ன்னு சொன்னேன். நாளைக்கே வச்சுக்கலாமேன்னு சொன்னாரு.
நடிகர் விஜயகாந்த் நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியான “பூந்தோட்ட காவல்காரன் ” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் செந்தில்நாதன். அதன் பின்னர் ராம்கி, அர்ஜுன், சரத் குமார் போன்ற ஹீரோக்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில், பாட்டாளி மகன், இளவரசன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தன. கடைசியாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “உன்னை நான்” என்ற படத்தை இயக்கிய செந்தில் அந்த படத்தை தயாரிக்கவும் செய்தார்.ஆனால், அந்த படம் மோசமான தோல்வியடைய கடன் தொல்லைக்கு ஆளானார் இயக்குனர் செந்தில். அதன் பின்னர் தொலைக்காட்சி தொடர்களை இயக்கி வந்த இவர், ஜெயா டிவி, ஜீ தமிழ், சன் டிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் சீரியல் தொடர்களை இயக்கி வந்தார். அதன் பிறகு ஒரு சன் டிவி தொடரில் நடித்துவந்தார், பின்னர் அதிலிருந்தும் விளக்கப்பட்டார். ஆனால் இவர் 90களில் இயக்கிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை ஆகும்.
எம்.ஜி.ஆர் நடித்த நம் நாடு படத்தின் இயக்குனரான ஜம்புலிங்கத்தின் மகன் தான் இவர். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். கடைசியாக தயாரித்து இயக்கிய திரைப்படம் பெரும் நஷ்டத்தை சந்தித்ததால் சில வருடங்கள் முன்பு கடும் நிதி தட்டுப்பாட்டில் இருந்ததாக செய்திகள் வந்தன. அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் பற்றிய ஸ்வாரஸ்யமான செய்தி ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.
அவர் பேசுகையில், "நான் சிகப்பு மனிதன் என்று எஸ்.ஏ. சி சார் ரஜினி சாரை வைத்து இயக்கிய படம். அதில் நான் அசோசியேட். எங்கள் இயக்குனருக்கு என்ன பழக்கம் என்றால் இரவு 8 மணிக்குமேல் ஷூட்டிங் செய்யமாட்டார். ஆனால் நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் நிறைய நைட் சீக்வன்ஸ்கள் இருக்கும். அதை அனைத்தையும் இரவில் எடுக்க வேண்டிய கட்டாயம். அதுவும் மவுண்ட் ரோட்டில் எல்லாம் இரவு 11 மணிக்கு மேல்தான் ஷூட்டிங் எடுக்க அனுமதி. அதனால் நாங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டி இருந்தது. அப்போது ஏற்பட்ட பழக்கம் தான் எனக்கும் ரஜினி சாருக்கும். அப்போதே நான் ஏதாவது ஒன்று உங்களுக்கு செய்வேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். பின்னர் நான் டைரக்ஷன் செய்யும்போது, 'பெரிய இடத்து பிள்ளை' என்று அர்ஜுனை வைத்து ஒரு படம் பண்ணேன். அதுல கவுண்டமணி சார் கதாசிரியரா வருவார். அதுல ராஜினிக்கிட்ட கத சொல்ற மாதிரி ஒரு சீன்.
அப்போ குரு சிஷ்யன் படம் ஷூட்டிங்ல ஏவிஎம் இருக்கார் ரஜினி. நான் அங்கே போனேன், முத்துராமன் சார் டைரக்ஷன் பண்ணிட்டு இருந்தாரு, ரஜினி சார் நடிச்சிட்டு இருந்தாரு. அப்போ அவர் கிட்ட அனுமதி வாங்கிக்கிட்டு வேகமா வந்தாரு, வந்து 'என்ன செந்தில், என்ன விஷயம் செந்தில்'ன்னு பரபரப்பா கேட்டாரு, சார் ஒன்னும் அவசரம் இல்ல, ஒரு கத பண்ணிருக்கேன், அதுல கவுண்டமணி கத சொல்ற மாதிரி ஒரு சீன், நீங்க பண்ணா நல்லாருக்கும்னு சொன்னேன். எப்போ ஷூட்டிங், எப்போ ஷூட்டிங்ன்னு உடனே கேட்டார், சார் நீங்க சொல்ற தேதிலதானே சார் வைக்க முடியும்ன்னு சொன்னேன். நாளைக்கே வச்சுக்கலாமேன்னு சொன்னாரு. சரின்னு சொன்னோம். அப்போ நாளைக்கு வீட்டுக்கு வந்துடுங்கன்னு சொன்னார். போனோம் ஷூட்டிங் முடிச்சோம். எப்போ டப்பிங்ன்னு கேட்டார். இன்னும் ரெண்டு நாள்ல பண்ணிடலாம் சார்ன்னு சொன்னேன். டேட் சொல்லுங்க பண்ணிடலாம்ன்னு சொன்னார். அதுவும் பண்ணி கொடுத்தார். இதுக்கு இடைல மேனேஜர கூப்புடல, தேதி இருக்கான்னு கேக்கல… எதுவும் இல்லாம நாளைக்கே வர்றேன்ன்னு சொன்னார். அது மட்டும் இல்லாம இதுக்கு எதுவும் நீங்க எனக்கு கொடுக்க கூடாதுன்னு சொன்னாரு. அதே மாதிரி எதுவும் வாங்கிக்காம பண்ணி கொடுத்தார். ரஜினி மாதிரி ஒருத்தர என் வாழ்க்கைல பார்த்தது இல்ல. " என்று கூறினார்.