Margazhiyil Makkalisai 2023: கோலார் தங்க வயலில் ‘மார்கழியில் மக்களிசை’.. ‘தங்கலான்’ இயக்குநர் ரஞ்சித்தின் பிளான் என்ன?
இயக்குநர் பா.ரஞ்சித் ஒருங்கிணைத்து வரும் ‘மார்கழியில் மக்களிசை’ இசை நிகழ்ச்சி இந்த முறை கோலார் தங்க வயலில் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
மார்கழியில் மக்கள் இசை
இயக்குநர் பா ரஞ்சித் தொடர்ச்சியாக பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார். தலித் மக்களின் வாழ்க்கை , கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் திரைப்படத் திருவிழா, இசை நிகழ்ச்சி என ஒவ்வொரு வருடமும் பல்வேறு நிகழ்ச்சிகள் சென்னை மற்றும் பிற மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி மார்கழியில் மக்களிசை. மார்கழி மாதம் என்றாலே பொதுவாக கர்னாடக சங்கீதம் என்கிற நிலை மாறி நாட்டுப்புற இசை, பறை இசை, ராப் இசை என பல்வேறு இசை வகைமைகளை ஒரே இடத்தில் இந்த நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
பல்வேறு நலிந்து வரும் இசைக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கெளரவிக்கப்பட்டும் வருகிறார்கள். பல்வேறு தரப்பு ரசிகர்களின் பங்களிப்புடன் வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி, நான்காவது முறையாக இந்த ஆண்டும் நடைபெற இருக்கிறது.
கோலார் தங்க வயலில் இசை நிகழ்ச்சி
The musical magnificence is back💥
— pa.ranjith (@beemji) December 20, 2023
Margazhiyil Makkalisai 2023! 🥁💃
The inaugural of the fourth edition of Margazhiyil Makkalisai is set happen this weekend in two cities!
- On 23rd at Kolar Gold Fields(KGF) and on 24th at Hosur!
We welcome you all! Free entry!
Details to… pic.twitter.com/UeeVnTmfhc
இதற்கு முந்தைய ஆண்டுகளில் சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டும் முற்றிலும் புதிய நிலப்பரப்பில் நடைபெற இருக்கிறது. பா.ரஞ்சித் தற்போது இயக்கி முடித்திருக்கும் திரைப்படம் தங்கலான்.விக்ரம் , மாளவிகா மோகனன், பார்வதி திருவோது உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து ஜி . வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கோலார் தங்க வயலில் இருந்த பழங்குடி மக்களின் போராட்ட வரலாற்றை இந்தப் படத்தில் பதிவு செய்துள்ளார் பா ரஞ்சித். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் கே.ஜி.எஃப் நிலப்பரப்பில் படம் பிடிக்கப்பட்டது. தற்போது அதே நிலத்தில் நடைபெற இருக்கும் மார்கழி மக்களிசை பல்வேறு புதிய இசை நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம் . மேலும் அந்த நிலத்தில் வாழ்ந்த மக்களுக்கு இது ஒரு புகழாரமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.
கட்டணம் இலவசம்
வரும் டிசம்பர் 23ஆம் தேதி கே.ஜி எஃப் மற்றும் 24ஆம் தேதி ஓசூரிலும் என் இரண்டு நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு எந்த வித கட்டணமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் ஐந்து நாட்கள் மூன்று இடங்களில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.