Thalapathy 69 Movie: விஜய் 5 முறை பார்த்து ரசித்த பாலைய்யா படத்தின் ரீமேக்கா தளபதி 69? விடிவி கணேஷ் ஓபன் டாக்!
தளபதி 69 பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கா என்பது குறித்து விடிவி கணேஷ் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கிய விஜய், சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக தளபதி 69 படத்தை தனது கடைசி படமாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கி வருகிறார்.
தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரைன், பிரியாமணி, மமிதா பைஜூ, மோனிஷா பிளெசி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளர். கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
கிட்டத்தட்ட ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படம் அரசியல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படம் தெலுங்கில் வெளியான பகவத் கேசரியின் ரீமேக் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் விடிவி கணேஷ் தளபதி 69 படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதாவது இயக்குனர், அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ், முனீஷ்காந்த் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சங்கராந்திகி வாஸ்துனம். வரும் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடிவி கணேஷ் தளபதி 69 படம் குறித்து பேசினார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விஜய்யை நான் பார்த்தேன். அவர், பகவத் கேசரி படத்தை 5 முறை பார்த்ததாக என்னிடம் கூறினார். மேலும், இந்தப் படத்தை ரீமேக் செய்ய அனில் ரவிபுடியிடம் கேட்டதாக கூறினார். விஜய்க்காக 5, 6 இயக்குநர்கள் வெயிட்டிங்கில் இருந்தார்கள். அதோடு அந்தப் படம் தான் கடைசி படம் என்றும் சொன்னதாக கூறிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட அனில் ரவிபுடி உண்மையில் விஜய்யை சந்தித்து பேசியதாக கூறினார். ஆனால் அது பகவத் கேசரி படத்தின் ரீமேக் இல்லை என்றும் வேறொன்றைப் பற்றி விவாதித்தாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய விடிவி கணேஷ் தான் பகவந்த் கேசரி படத்தில் நடித்திருந்ததாக கூறினார். பகவந்த் கேசரி படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஸ்ரீலீலா ஜான் விஜய், ஆடுகளம் நரைன் ஆகிய பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

