Thalapathy 68 Title: செம்ம மாஸ்.. வெளியான தளபதி 68 படத்தின் தலைப்பு.... இன்னொரு கிரிக்கெட் படம் எடுக்கிறாரா வெங்கட் பிரபு?
வெங்கட் பிரபு மீண்டும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படம் எடுக்கிறாரா எனும் கேள்விகளை இந்தப் படத்தின் தலைப்பு எழுப்பியுள்ளது.
விஜய் 68 படத்தின் தலைப்பு குறித்த சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி!
நடிகர் விஜய் தற்போது தன் 67ஆவது படமான லியொ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார். லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வரும் நிலையில், வரும் அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாகும் என ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் கடந்த மே 21ஆம் தேதி விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில், வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.
நீண்டநாளாக கோலிவுட்டில் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தக் கூட்டணி இணைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள நிலையில், புதிய கீதை படத்துக்குப் பிற யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைகிறார்.
தளபதி 68க்கு ஐபிஎல் அணி டைட்டில்!
லியோ படப்பிடிப்பு நிறைவடைந்த பின் விஜய்யின் தளபதி 68 படத்துக்கான பணிகள் தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தளபதி 68 படத்தின் தலைப்பு குறித்த சுவாரஸ்ய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்துக்கு ‘சிஎஸ்கே’ எனப் பெயர் வைக்கப்படலாம் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெங்கட் பிரபுவின் முதல் படமான சென்னை 28 திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் தலைப்பு, வெங்கட் பிரபு மீண்டும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படம் எடுக்கிறாரா எனும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
சூடுபறக்க நடக்கும் லியோ படப்பிடிப்பு!
லியோ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. விஜய், த்ரிஷா, அர்ஜூன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலி கான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
செவன் ஸ்க்ரீன் பேனரில் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். பிரபல் கோலிவுட் இசையமைப்பாளர் அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
முன்னதாக லியோ படத்தில் சஞ்சய் தத் விஜய்யின் அப்பா ரோலில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அர்ஜுன் இப்படத்தில் விஜய்யின் நண்பராக இருந்து பின் துரோகியாக மாறிவிடுவார் என்றும் தகவல்கள் முன்னதாகக் கசிந்தன.
மேலும் நடிகர் விஜய்யுடன் ஒரு சிங்கம் படம் முழுவதும் பயணிக்கும் என்றும், அவரது கதாபாத்திரத்தை பிரதிபலிக்க இந்த சிங்கம் அனிமேஷன் மூலமாக உருவாக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.