‛யப்பாடா... ஆன்லைன் புக்கிங் ஆரம்பம்...’ தலைவியா... லாபமா... எப்படி இருக்கிறது விற்பனை?
‘தலைவி’ படத்திற்குப் போட்டியாக, செப்டம்பர் 10 அன்று 'லாபம்’ வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு நாள் முன்னதாக செப்டம்பர் 9-ம் தேதி வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளால் களையிழந்த தமிழ் சினிமா துறை இப்போது மீண்டும் ரசிகர்களின் வருகைக்காக தயாராகி வருகின்றது.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 9-ம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதற்கான முன்பதிவு இப்போது தொடங்கி உள்ளது. பிரபல முன்பதிவு தளங்களில் திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் இப்போது விற்பனையாகி வருகின்றன. பொதுவாக, விடுமுறை நாட்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும். முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் முடிந்துவிடும். ஆனால், இம்முறை இன்னும் முதல் நாள் காட்சிகள் கூட முழுவதுமாக முன்பதிவு செய்யப்படாமல் உள்ளது. பெரும்பாலான தளங்களில் டிக்கெட்டுகள் விற்பனையாகமல் இருக்கின்றன.
கங்கனா ரனாவத் நடித்துள்ள ’தலைவி’, விஜய் சேதுபதி நடித்துள்ள ’லாபம்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. எனினும், ரசிகர்களின் வருகை எப்படி இருக்கும் என்பது முதல் நாள் காட்சிகளுக்கு பிறகே தெரியவரும் என்ற நிலையில் உள்ளது.
After long break good to see Tamil releases lined up for next week..#Laabam From Sep-9..#Thalaivii from Sep-10..
— Naganathan (@Nn84Naganatha) September 4, 2021
Theatre booking for both movies started across TN.. pic.twitter.com/UljsqUQWo4
கங்கனா ரனாவத், அரவிந்த் சுவாமி ஆகியோர் முன்னனி வேடங்களில் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி இயக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இதனை இயக்கியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் வெளியீடு, கொரோனா ஊரடங்கு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது ஊரடங்குகள் விதிகள் தளர்க்கப்பட்டிருக்கும் நிலையில், செப்டம்பர் 10 அன்று இந்தப் படம் வெளியாக உள்ளது.
விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன் ஆகியோர் இந்தப் லாபம் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜனநாதனின் மறைவுக்குப் பிறகு, அவரது இறுதி திரைப்படமாக வெளியாக இருக்கிறது ‘லாபம்’. ‘தலைவி’ படத்திற்குப் போட்டியாக, செப்டம்பர் 10 அன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு நாள் முன்னதாக செப்டம்பர் 9-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படங்களை தவிர்த்து, ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு, ஆர்யாவின் அரண்மனை-3, விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர், ஹன்சிகாவின் மஹா, சசிகுமார், சத்தியராஜ் நடிப்பில் உருவாகி வரும் எம்ஜிஆர் மகன், சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி ஆகியோர் நடித்திருக்கும் முருங்கைக்காய் சிப்ஸ், சிவகார்த்திகேயனின் டாக்டர் ஆகிய திரைப்படங்கள் திரையரங்கு வெளியீடுக்கு காத்திருக்கின்றன.
திரையரங்கிற்கு வருபவர்கள், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளான பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற தவற வேண்டாம் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.