Surya in Thalaivar 170: கமலைத் தொடர்ந்து ரஜினியுடன் இணையும் சூர்யா? தலைவர் 170க்காக பேச்சுவார்த்தை நடத்தும் டி.ஜே.ஞானவேல்!
நடிகர் ரஜினிகாந்திடம் இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், சூர்யாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்தின் 170ஆவது திரைப்படத்தில் சூர்யா இணைவதாகத் தகவல் வெளியாகிறது.
நடிகர் ரஜினிகாந்தை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ரஜினிகாந்த், அடுத்ததாக 'ஜெய் பீம்’ இயக்குநர் டி.ஜே. ஞானவேலுடன் இணையவுள்ளார்.
நடிகர் சூர்யாவுடன் ’ரத்த சரித்திரம்’ படத்தில் வசனகர்த்தாவாக தன் பயணத்தைத் தொடங்கிய டி.ஜே.ஞானவேல், சுமார் 10 ஆண்டுகள் கழித்து ’ஜெய் பீம்’ படத்தில் அவரை இயக்கி, ஹிட்டடித்து ஒட்டுமொத்த திரை உலகின் கவனத்தையும் ஈர்த்தார்.
பயணம், தோனி உள்ளிட்ட படங்களிலும் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ள ஞானவேல், 2017ஆம் ஆண்டு ’கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியான தன் இரண்டாவது படமான ஜெய் பீம் படம் மூலமாக தமிழ் சினிமாவை உலுக்கிய ஞானவேல், இந்தப் படத்துக்காக பல்வேறு விருதுகளையும் குவித்தார். சூர்யாவின் 2டி நிறுவனமே இந்தப் படத்தைத் தயாரித்த நிலையில், இந்தப் படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்ததுடன், பல சர்வதேச விருது விழாக்களிலும் கலந்து கொண்டு கவனமீர்த்து லைக்ஸ் அள்ளியது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்குவதாக கடந்த மார்ச்.02ஆம் தேதி லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இன்னும் பெயரிப்படாத இந்தப் படம் தலைவர் 170 என தற்போதைக்கு குறிப்பிடப்படும் நிலையில், ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் நடிகர் சூர்யாவை தனது அடுத்த படமான ’தலைவர் 170’ படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவுக்கு அழுத்தமான பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நடிகர் ரஜினிகாந்திடம் இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், சூர்யாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே விக்ரம் படத்தில் தான் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் மூலம் வெகு சில நிமிடங்களே திரையில் தோன்றி மாஸ் காண்பித்து சூர்யா லைக்ஸ் அள்ளினார். ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் முழுநீள படத்தைத் தொடர்ந்து ரசிகர்கள் கோரும் அளவுக்கு அந்தக் கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், அடுத்ததாக ரஜினியுடனும் சூர்யா கேமியோ கதாபாத்திரத்தில் தோன்றி லைக்ஸ் அள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சூர்யா கங்குவா, வாடிவாசல் படங்களில் பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.