நெஞ்சை உருக்கும் பேரிடர்! கேரள நிலச்சரிவுக்கு 50 லட்சம் நன்கொடையாக வழங்கிய சூர்யா குடும்பம்!
கேரள வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த நிலச்சரிவால் ஏராளமானோர் சிக்கி தவித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக நன்கொடை வழங்கியுள்ளனர் சூர்யா குடும்பத்தினர்.
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. மேப்பாடி, சுரல்மலா மற்றும் முண்டக்கை உள்ளிட்ட பகுதிகள் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அப்படி ஒரு ஊரே இருந்த இடம் தெரியாத அளவுக்கு நிலச்சரிவு மற்றும் கடுமையான மழையால் அடித்து செல்லப்பட்டுள்ளன.
இந்த நிலச்சரிவில் சிக்கி 280க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மண்ணுக்குள் சில உடல்கள் புதைந்து இருப்பதால் இந்த உயிரிழப்பானது மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பலரின் நிலையும் என்ன என்பதே தெரியாமல் தவித்து வருகிறார்கள் மக்கள். இந்த நிலச்சரிவால் கேரளம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து கொண்டே இருப்பதால் மீட்பு பணிகள் தாமதமாகி வருகின்றன. மீட்பு படையினர், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் இந்த மீட்டு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த உடல்களை பார்க்கையில் அனைவரையும் அது நிலை குலைய வைக்கிறது. ஒட்டுமொத்த வயநாடு பகுதியே ஆறு போல காட்சி அளிக்கிறது.
இந்த நிலச்சரிவால் சிக்கிய மக்களுக்கு பல தரப்பில் இருந்தும் நன்கொடை வந்து கொண்டு இருக்கின்றன. கேரள அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பொது மக்களிடம் நன்கொடை வசூலித்து வருகிறது. அந்த வகையில் திரையுலகை சேர்ந்த நடிகர் நடிகைகளும் அவர்களால் முடிந்த நன்கொடை தொகையை வழங்கி வருகிறார்கள். நடிகர் விக்ரம் 20 லட்சம் ரூபாயையும், நடிகை ராஷ்மிகா மந்தனா 10 லட்சம் ரூபாயையும் நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளனர்.
அந்த வகையில் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா மூவரும் சேர்ந்து கேரளாவின் நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக ரூபாய் 50 லட்சத்தை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கியுள்ளனர். மேலும் நிலச்சரிவால் உயிர் இழந்தவரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொண்டனர். பலரும் இந்த நிவாரண நிதிக்காக பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.
.#WayanadLandslide my thoughts and prayers with the families.. Heartbreaking..! Respects to all members of Government agencies and people on the field helping the families with rescue operations 🙏🏼
— Suriya Sivakumar (@Suriya_offl) July 31, 2024
பல உயிர்களை பலி வாங்கிய நிலச்சரிவுக்கு தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொண்டார் நடிகர் சூர்யா. "வயநாடு நிலச்சரிவில் சிக்கிய குடும்பங்களை நினைக்கையில் நெஞ்சை உலுக்குகிறது. மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உதவி செய்யும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் மற்றும் களத்தில் இறங்கி உதவி செய்யும் மக்களுக்கு நான் மரியாதையுடன் தலைவணங்குகிறேன்" என குறிப்பிட்டு இருந்தார்.