Sa Re Ga Ma Pa Lil Champs: இலங்கை பாராளுமன்றம் வரை ஒலித்த அசானியின் குரல்.. சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் நடந்தது என்ன?
மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த சிறுமி இன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாடி பெருமை சேர்த்திருப்பதாக இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் பேசிய வீடியோ சரிகமப மேடையில் ஒளிபரப்பானது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்க வந்தவர் அசானி.
இலங்கையில் கண்டி என்ற பகுதியை சேர்ந்த மலைவாழ் சிறுமியான இவரது குடும்பம் தேயிலை பறிக்கும் வேலையை செய்து வருகிறது. வெறும் எப். எம் ரேடியோவில் பாட்டு கேட்டு பாட கற்று கொண்ட இவர் சரிகமப ஆடிஷனில் பங்கேற்க முடியாமல் போனது. இதையடுத்து அப்பகுதி மக்களின் உதவியால் சென்னை வந்து நடுவர்களை சந்திக்க ஆடிஷன் முடிந்து விட்ட காரணத்தால் அவரது திறமையை நிரூபிக்க ஓரிரு வாரங்கள் பாடட்டும், பயிற்சி பெறட்டும் பிறகு என்ன செய்வது என்று யோசிக்கலாம் என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில் வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் எவர் கிரீன் ரவுண்ட் நடைபெற உள்ளது, இதில் அசானி “ஊரு சனம் தூங்கிருச்சி” என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார், மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த சிறுமி இன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாடி நமக்கு பெருமை சேர்த்திருப்பதாக, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் பேசிய வீடியோவை சரிகமப மேடையில் பதிவிட்டு நிகழ்ச்சிக் குழு பாராட்டியுள்ளனர்.
அதன் பிறகு நடுவர்கள் அசானி இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்கலாமா? இல்லையா? என்பதை மற்ற போட்டியாளர்களின் பெற்றோர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று சொல்ல, எல்லாரும் ஒருமனதாக அசானியை போட்டியாளராக அறிவிக்க அனுமதி அளித்துள்ளனர், அதன் பிறகு மேடைக்கு வந்த நடுவர்கள் அசானிக்கு மெடல் அணிவித்து போட்டியாளராக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதனால் அசானி ஆனந்தக் கண்ணீர் விட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். பலரும் போட்டியாளராகிய அசானிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அர்ச்சனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.