Karthigai Deepam: பிரிவுக்கு காரணம் கேட்ட கார்த்திக்.. தீபா சொல்ல போகும் பதில் என்ன? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
“ஒரு பிரச்னையை பார்த்து பயப்படக் கூடாது, அதனை சரி செய்ய முயற்சி செய்யணும் என்ன விஷயம் சொல்லுங்க” என்று கார்த்திக் கேட்கிறான்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா கார்த்திக் மீதான காதலை வெளிப்படுத்த முடியாமல் தவித்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தீபா “என்னை ஏன் இப்படி சோதிக்கிற. அவரோட வாழ்க்கையில் என்னை வரவிடாமல் செய்து இருக்கலாம்” என்று கடவுளிடம் வேண்டி கொண்டிருக்க, கார்த்திக் அங்கு வந்து உங்களிடம் தனியா பேச வேண்டும் என்று சொல்கிறான். பிறகு தீபாவை தனியாக அழைத்துச் சென்று “உங்களுக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படியொரு முடிவெடுத்தீங்க” என்று கார்த்திக் கேட்க, தீபா “இப்போதைக்கு என்கிட்ட எதையும் கேட்காதீங்க” என்று சொல்லி விடுகிறாள்.
“ஒரு பிரச்னையை பார்த்து பயப்படக் கூடாது, அதனை சரி செய்ய முயற்சி செய்யணும் என்ன விஷயம் சொல்லுங்க” என்று தொடர்ந்து கார்த்திக் கேட்க, தீபா வாய் திறக்காமல் இருக்கிறாள், “சரி இனிமே உங்க கிட்ட இதைப் பற்றி கேட்க மாட்டேன், உங்க இஷ்டம் போல் பண்ணுங்க” என்று சொல்லி கார்த்திக் அங்கிருந்து நகர்கிறான்.
அடுத்து தர்மலிங்கம் ரூமுக்குள் சோகமாக உட்கார்ந்து இருக்க, அங்கு வந்த ஜானகி, வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துடுங்க என்று சொல்ல, தர்மலிங்கம் “நம்ம பொண்ணு நல்லா இருக்கனும்னு எல்லாம் செய்தோம், ஆனால் அவ அதை புரிஞ்சிக்கல” என்று வருத்தப்பட்டு பணத்தை திருப்பி கொடுக்க கிளம்பி செல்கிறார்.
குணாவை சந்தித்து வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வந்ததாக சொல்ல, அவன் 6 மாத வட்டியை சேர்த்து கொடுக்க சொல்கிறான். தர்மலிங்கம் “எதுக்கு 6 மாதம் வட்டி கொடுக்கணும்” என்று கேள்வி எழுப்ப, குணா இவரை பிடித்து தள்ளி விட கார்த்திக் வந்து தாங்கி பிடிக்கிறான், “இது யார்? வெறப்பா இருக்கான் சொந்தகார பையனா?” என்று கேட்க, கார்த்திக் “உங்க மருமகன்னு சொல்லுங்க மாமா” என்று சொல்ல தர்மலிங்கம் திகைத்து நிற்கிறார்.
இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.