Ethirneechal: தீப்பொறி பறக்க ஆக்ஷனில் இறங்கிய ஆதி குணசேகரன்.. இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!
Ethirneechal Oct 02: எதிர்நீச்சலில் இன்று புதிய ஆதி குணசேகரனின் என்ட்ரி கன்ஃபார்ம். வெளியானது தெறிக்கவிடும் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரியிடம் கதிர் அறை வாங்கியதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருந்தார்கள்.
வீட்டில் உள்ள பெண்களை மரியாதை இல்லாமல் பேசுவதை வழக்கமாகக் கொண்டு இருந்த கதிர் நாகரீகம் இல்லாமல் ஈஸ்வரியையும் அவளின் பிள்ளைகளையும் அசிங்கமாகப் பேச கோபமான ஈஸ்வரி கதிரை ஓங்கி அறைந்தாள். சொத்துக்காக ஆசைப்பட்டு இந்த கதிர் தான் குணசேகரனை ஏதோ செய்து விட்டு இப்போ செருப்பைக் காட்டி நாடகம் போடுகிறான் என ஜனனி சொல்லி கதிரின் கோபத்தை உச்சத்தில் எடுத்து செல்கிறாள்.
எதுவும் புரியாமல் விசாலாட்சி அம்மா ஜனனியை திட்டியதோடு, சக்தியிடம் சொல்லி அடக்க சொல்கிறார். கதிரிடம் ஈஸ்வரி குணசேகரன் இருந்த இடம் பற்றி கேட்கிறாள். அவள் சென்று கூட்டி வருவதாக சொல்கிறாள். அவனை இங்கே அசிங்கப்படுத்தி விரட்டியது பத்தாது என, "அங்கேயும் சென்று கூட்டிவர போறியா?" என ஈஸ்வரியை மேலும் அவமானப்படுத்துகிறார்கள். இது தான் நேற்றைய எபிசோடின் கதைக்களம்!
அதன் தொடர்ச்சியாக மிகவும் அதிரடியான இன்றைய எபிசோடுக்கான எதிர்நீச்சல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
கதிர் மீது இருக்கும் சந்தேகத்தை நிரூபிக்கும் வகையில் அண்ணனோடு வருகிறேன் என்று அவரை அழைத்து வர சென்ற ஞானமும் கதிரும் காரில் வந்து இறங்குகிறார்கள். மொத்த வீடும் வாசலில் குணசேரனை எதிர்பார்த்து நிற்கிறது. காரில் இருந்து குணசேகரன் இறங்குவார் என் எதிர்பார்த்தால், ஞானமும் கதிரும் மட்டுமே இறங்கி வருகிறார்கள். விசாலாட்சி அம்மா "நீங்க இரண்டு பேரும் மட்டும் தான் வந்து இருக்கீங்க? பெரியவன் எங்க?" என மலர்ந்த முகத்துடன் கேட்கிறார் விசாலாட்சி அம்மா.
“என்ன இந்த தடவையும் சாப்பாட்டை உருட்டி கொடுத்தாரா? சாப்பிட்டு மயக்கத்துல வந்துடீங்களா?” என ரேணுகா நக்கலாக கேட்க "அண்ணனை பார்த்துட்டு தான் வரோம்" என ஞானம் சொல்கிறான். "செருப்பை பாத்தோம், குரலைக் கேட்டோம் என ரியாக்ஷன் தான் ஓடிக்கிட்டு இருக்கு. ஆக்ஷன் காணுமே?" என நந்தினி சொல்கிறாள்.
கதிர் குணசேகரனுக்கு போன் செய்து "அண்ணே ஆக்ஷன் பார்க்கணுமாம் இவங்களுக்கு... காட்டிருவோமா?" என்கிறான். கெத்தாக கம்பீரமாக ஜீப்பில் வந்து கொண்டு இருக்கிறார் ஆதி குணசேகரன். "உங்க ஆட்டத்தை எல்லாம் அடக்க இதோ வந்துட்டாருல்ல எங்க மாமா ஆதி குணசேகரன்" என்கிறான் கரிகாலன். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
புதிய ஆதி குணசேகரனாக யார் வரப்போகிறார் என எழுந்த கேள்விகள் ஆலோசனைகளுக்கு மத்தியில் அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக தெறிக்க விடும் வகையில் பொறி பறக்க வெளியாகியுள்ளது இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ!
எழுத்தாளர் மற்றும் நடிகர் வேலராமமூர்த்தி தான் முதலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியானது. ஆனால் அது இன்னும் உறுதியாகவில்லை பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தபட்டது என கூறப்பட்டதால் ரசிகர்கள் பலரும் பல நடிகர்களை பரிந்துரைத்தனர். ஆனால் இறுதியில் வேல ராமமூர்த்தி தான் உறுதி செய்யப்பட்டு ஆதி குணசேகரனாக என்ட்ரி கொடுக்க உள்ளார். இதனால் எதிர்நீச்சல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.