Tamizha Tamizha: ஜோதிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட காரணம்.. பிரபலங்கள் சொன்ன காரணத்தைப் பாருங்க..!
தமிழா தமிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள் ஜானகி தேவி, சுபத்ரா, மற்றும் நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி ஜோதிடம் மற்றும் பரிகாரத்தில் இருக்கும் நம்பிக்கை பற்றிய கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
தமிழா தமிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள் ஜானகி தேவி, சுபத்ரா, மற்றும் நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி ஆகியோர் ஜோதிடம் மற்றும் பரிகாரத்தில் தனக்கு இருக்கும் நம்பிக்கை பற்றிய கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சி மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வாரம் “ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் vs சந்தேகம் எழுப்பும் பொதுமக்கள்” என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது. இதில் நடிகைகள் நளினி, அர்ச்சனா, ஜானகி தேவி,சுபத்ரா நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி, இயக்குநர் மாரிமுத்து உள்ளிட்டோர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகை ஜானகி தேவி பேசும் போது, “நான் ஜோசியத்தை நம்புவேன். 2014 ஆம் ஆண்டு வரை தான் எங்க அப்பாவின் ஜாதகத்தை எழுதியிருந்தாங்க. அதன்பிறகு அந்த ஜோதிட புத்தகத்தில் எதுவும் எழுதப்படவில்லை. அதேசமயம் எங்கள் குடும்பத்தில் மற்ற எல்லோருக்கும் ஜாதகம் எழுதப்பட்டிருந்தது. நாங்கள் முதலில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டோம். ஆனால் 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் எங்க அப்பா இறந்து விட்டார். அது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. மேலும் நாங்கள் வாராஹி அம்மனை அதிகமாக வழிபட கூடியவர்கள். பல்லி வந்து பொதுவாக வீட்டில் சுவற்றில் தான் இருக்கும். என் வீட்டில் தரையில் போகும். நான் அதனுடன் ‘என்ன அம்மா தரையில போய்கிட்டு இருக்கீங்க?’ என பேசுவேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்” என கூறினார்.
நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி பேசும்போது, ‘நான் ஒரு 8வது படித்து கொண்டிருந்தேன். நாங்க 7 அக்கா, தங்கச்சிகள், ஒரு தம்பி வீட்டில் இருக்கிறோம். வள்ளுவர் என ஒருவர் வந்து ஒவ்வொருவரையும் பார்த்து ஆரூடம் சொன்னார்கள். என்னைப் பார்த்து, இந்த பொண்ணு மிகப்பெரிய பிரபலமாவார். கடற்கரை ஓரத்தில் இருக்கும் ஒருவர் தான் மணாளனாக வருவார் என சொன்னார். அதன்படி என்னுடைய கணவர் புஷ்பவனம் குப்புசாமி, நாகப்பட்டினம் கடற்கரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். எதையும் பார்க்காமல் வள்ளுவர் அவர்கள் சொன்னது, எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது.
நடிகை சுபத்ரா, ‘நாம் என்னவாக ஆக வேண்டும் என குழப்பத்தில் இருக்கும்போது, மத்தவங்க பரிகாரம் பண்ணா இது நடக்கும் என்ற நம்பிக்கையை நம்மிடம் விதைக்கிறார்கள். அது அப்படியே நடப்பதாக நான் நினைக்கிறேன். எனக்கு கடவுள் பக்தி நிறைய உண்டு. எனக்கு என்ன கஷ்டம் இருந்தாலும் கடவுளை என் அம்மாவாக, தங்கையாக நினைத்துக் கொண்டு வெளிப்படையாக பேசுவேன், திட்டுவேன்.