CWC 5: நான் யாருக்கும் மாற்று இல்லை, வெங்கடேஷ் பட்டை மீட் பண்ணதில்லை.. மாதம்பட்டி ரங்கராஜ் பளிச்!
Cooku With Comali 5: மாதம்பட்டி ரங்கராஜ் ஒருபுறம் மெல்ல மெல்ல இந்த நிகழ்ச்சியால் ரசிகர்களைப் பெற்று வந்தாலும், மறுபுறம் செஃப் வெங்கடேஷ் பட் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.
குக்கு வித் கோமாளி சீசன் 5
விஜய் தொலைக்காட்சியின் குக்கு வித் கோமாளி சீசன் 5 (Cooku With Comali 5) நிகழ்ச்சி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய் தொலைக்காட்சியின் தனித்துவமான மற்றும் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக்கு வித் கோமாளியில் இருந்து சில மாதங்களுக்கு முன் செஃப் வெங்கடேஷ் பட் விலகுவதாக அறிவித்தது அவரது ரசிகர்கள் மற்றும் இந்த ஷோவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து வழங்கி வந்த மீடீயா மேசன் நிறுவனத்தின் விலகலை அடுத்து செஃப் வெங்கடேஷ் பட்டும் விலக, தற்போது இருதரப்பினரும் சன் தொலைக்காட்சியில் டாப் குக்கு டூப் குக்கு எனும் நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர். வரும் மே 19ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விலகிய வெங்கடேஷ் பட், இணைந்த மாதம்பட்டி ரங்கராஜ்!
இந்நிலையில் இங்கு விஜய் தொலைக்காட்சியில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக பிரபல சமையல்கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமுவுடன் ஜட்ஜாக இந்த 5ஆவது சீசனில் இணைந்துள்ளார். 2 வாரங்களைக் கடந்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
செஃப் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்துள்ளது இதுவரை கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. கமல்ஹாசன், விஜய் தொடங்கி பல செலிப்ரிட்டிகளுக்கும் முக்கிய விழாக்கள், நிகழ்வுகளில் கேட்டரிங் செய்து கொடுத்து அசத்தும் மாதம்பட்டி ரங்கராஜ், ஒருபுறம் மெல்ல மெல்ல ரசிகர்களைப் பெற்று வந்தாலும், மறுபுறம் வெங்கடேஷ் பட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்க்காணலில் மாதம்பட்டி ரங்கராஜ் இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
‘யாரும் யாருக்கும் மாற்று இல்லை’
“செஃப் தாமு போன்ற லெஜண்டுடன் பக்கத்தில் நின்று ஒரு விஷயம் செய்கிறேன். அவர் கடல் போல் கற்றுள்ளார். நான் ஓடை தான். கடைசி 7 ஆண்டுகளில் தொலைக்காட்சி முன் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு எனக்கு நேரம் இருந்தது இல்லை. குக்கு வித் கோமாளி அங்கங்கு காட்சிகளாக பார்த்துள்ளேன். நான் சமைக்க வரும் முன் எனக்கு சமையல் தெரியாது. என் அப்பாவிடம் கற்றுக் கொண்டும், கேட்டரிங் கோர்ஸ் படித்துவிட்டும் தான் வந்தேன். அதேபோல் படம் நடிப்பதற்கு முன் கூத்துப்பட்டறை மற்றும் நடிப்பு கற்றுக் கொண்டு தான் வந்தேன். எங்கள் மாதம்பட்டி குழுவுக்கு ஒரு செஃப் உள்ளார்.
அவர் இந்த நிகழ்ச்சிக்காக எனக்கு வகுப்பு எடுத்து வருகிறார். என் வாழ்க்கையில் நான் நடனமாடியதில்லை, இந்த நிகழ்ச்சிக்காக மிகவும் பதட்டமாகி நடனமாடினேன். இந்த நிகழ்ச்சியில் மாட்டிக் கொண்டோம் எனும் ஃபீல் இல்லை. எப்படா ஷூட் நாள் வரும் என நான் ஆர்வமாக காத்திருக்கிறேன். நிகழ்ச்சி கலகலப்பாக உள்ளது. எனக்கு இந்த நிகழ்ச்சி ஸ்ட்ரெஸ் பஸ்டராக உள்ளது. புகழ் ஒரு சிறந்த செஃப். ஆனால் கோமாளியாக உள்ளார்.
‘வெங்கடேஷ் பட் லெஜண்ட்’
நான் இன்னொரு ஜட்ஜூக்கு பதிலாக இந்த நிகழ்ச்சிக்கு வரப்போகிறேன் என்றெல்லாம் சொல்லி என்னை நிகழ்ச்சி தரப்பில் அணுகவில்லை. யாரும் யாருக்கும் மாற்றாக இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். நான் நான் தான், அவர் அவர் தான், நான் வெங்கடேஷ் பட்டை நேரில் சந்தித்தது கிடையாது. அவர் ஒரு பெரிய லெஜண்ட் என்று தெரியும். நாம் எப்படி இதை செய்யலாம், நாம் எப்படி கற்றுக்கொள்ளலாம் என்பதை தான் இந்த நிகழ்ச்சியில் பார்க்கிறேன்” எனப் பேசியுள்ளார்.