Cook With Comali: வந்தாச்சு குக் வித் கோமாளி சீசன் 5.. நடுவரான மாதம்பட்டி ரங்கராஜ்.. ப்ரோமோ இதோ!
Cook With Comali 5:குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் இருந்து வெங்கடேஷ் பட் சில வாரங்களுக்கு முன் விலகுவதாக அறிவித்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடர்பான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் என்றைக்கும் நிலைத்திருக்கும். இதனை புரிந்துக் கொண்ட சேனல்கள் சீசன் கணக்கில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது.அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் அனைவரது மனம் கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சி 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இந்த 4 சீசன்களையும் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
இந்நிகழ்ச்சி மூலம் பாலா, சிவாங்கி, புகழ், மணிமேகலை, சுனிதா, தங்கதுரை என பலரும் வேற லெவலில் புகழ் பெற்றனர். முதல் சீசனில் வனிதா விஜயகுமாரும், 2வது சீசனில் கனியும், 3வது சீசனில் ஷ்ருதிகாவும், 4வது சீசனில் மைம் கோபியும் வெற்றி பெற்றனர். தமிழில் இந்நிகழ்ச்சி வெற்றி பெற்ற காரணத்தால் கன்னடம், பெங்காலி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஒளிபரப்பாக தொடங்கியது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்ததால் இதற்கு வயது வித்தியாசமில்லாமல் ரசிகர்கள் இருந்தனர்.
இப்படியான நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் ஒளிபரப்பாகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியானது. இந்த சீசனில் இருந்து சமையற்கலைஞர் வெங்கடேஷ் பட் சில வாரங்களுக்கு முன் விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து யார் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இப்படியான நிலையில் சமையல் துறையில் பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ் கலந்துக் கொள்ளப் போகிறார் என தெரிவிக்கப்பட்டது. இவர் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் நன்கு பரீட்சையமானவர்.
இந்நிலையில் குக் வித் கோமாளியின் 5வது சீசனுக்கான அறிமுக ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் விமானத்தில் வரும் செஃப் தாமுவும், மாதம்பட்டி ரங்கராஜூம் வந்து இறங்குவது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் சமையற்கலையில் சிறந்து விளங்குபவர். ஆண்டுக்கு சுமார் 400 திருமணங்களுக்கு மேல் சமைப்பவர். கோவையை பூர்விகமாக கொண்ட இவரின் தந்தையும் ஒரு பிரபல சமையல்காரர் தான். சினிமா, அரசியல் என பல பிரபலங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் குழுவினரின் சமையல் தான் இடம்பெறும். இப்படியான நிலையில் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க போகிறார் என்ற அறிவிப்பு எதிர்பார்ப்பை எகிறியுள்ளது.