Bigg Boss 7 Tamil: ஐஸ்வர்யா தத்தா முதல் அசீம் வரை.. விதவிதமாக சர்ச்சையை கிளப்பிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. குட்டி ரீவைண்ட்!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளை விஜய் டிவியில் கொண்டாட்டமாகத் தொடங்க உள்ள நிலையில், கடந்த சீசன்கள் சந்தித்த சர்ச்சைகள் பற்றி ஒரு குட்டி ரீவைண்ட்!
சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள்:
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் கிரேஸ் அதிகம். கடந்த ஆறு சீசன்களாக அமோக வரவேற்பைப் பெற்று வெற்றி நடை போட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7ஆவது சீசனுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது என்றே சொல்ல வேண்டும்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி ஒரு செலிபிரிட்டியாகி விடுகிறார்கள். கடந்த ஆறு சீசன்களிலும் சண்டை சச்சரவில் தான் இருந்தது. ஜூலி முதல் அசீம் வரை அனைவரும் சர்ச்சையை கிளப்பினர். அதிலும் கடந்த ஆறு சீசன்களை காட்டிலும் ஆறாவது சீசனில் டைட்டில் வின்னர் அறிவிப்பிலும் கூட ஏராளமான சர்ச்சைகளை சந்தித்தது என்றே சொல்லலாம். அந்த வகையில், தமிழ் பிக் பாஸின் ஒவ்வொரு சீசனிலும் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களாக மாறிய சிலர் பற்றி இந்த பதிவில் காணலாம்.
முதல் சீசன்:
பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா-ஆரவ் இடையே காதல் உருவானதாக கூறப்பட்டதோடு, இவர்களின் உறவு பற்றி சோஷியல் மீடியாக்களில் வதந்திகள் பரவின. மேலும், பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவியாவை ஆரவ் முத்தமிட்டது பெரும் சர்ச்சையானது. மேலும், ஓவியாவும், ஆரவ்வுக்கும் ஏற்பட்ட சண்டையால் ஓவியா தற்கொலைக்கு முயன்றார். பின்னர், இவர் நிகழ்ச்சியில் இருந்து பாதிலேயே வெளியேறினார். அதேபோல, சக போட்டியாளர்களால் மனரீதியாக பாதிக்கப்பட்டதால் வீட்டிலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார் பரணி. இதனாலேயே இவரும் நிகழ்ச்சியின் பாதிலேயே வெளியேறினார்.
இரண்டாவது சீசன்:
பிக் பாஸ் 2 சீசனில் டாஸ்க் ஒன்றில் ஐஸ்வர்யா தத்தா, சொன்னதைக் கேட்காததால் சக போட்டியாளரான தாடி பாலாஜியின் தலையில் குப்பையை கொட்டினார். ஐஸ்வர்யாவின் அந்த செயலை சோஷியல் மீடியாவில் பலரும் வறுத்தெடுத்தனர். அதேபோல, மகத் மற்றும் யாஷிகாவின் காதல் சோஷியல் மீடியாவில் பெரும் புயலையே கிளப்பியது. அதாவது, மகத் யாஷிகாவை பார்த்து ஐ லவ் யூ சொன்ன வேகத்தில், அவருடனான காதலை முறித்துக் கொள்வதாக இணையத்தில் பிராச்சி மிஸ்ரா அறிவித்தார். இதனால் நெட்டிசன்களும் பிராச்சிக்கு ஆறுதல் கூறினர். பின்னர், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத் நேராக பிராச்சியை சந்தித்து பேசி, மீண்டும் பேட்ச் அப் ஆகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
மூன்றாவது சீசன்:
பிக்பாஸ் சீசன் மூன்றில் மதுமிதாவிற்கும், மற்ற போட்டியாளர்களுக்கும் கருத்து மோதல் இருந்தது. தமிழ் கலாச்சாரம் பற்றி மதுமிதா பேசியது கடும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், இவர் கையை வெட்டிக் கொண்டதும் பரபரப்பை கிளப்பியது. மேலும், ஷெரின் மற்றும் தர்ஷன் இடையேயோன உறவு பற்றி வனிதா தவறாக பேசியதும் சர்ச்சையானது. அதேபோல, போட்டியாளர் சரவணன், கூட்டமான பேருந்தில் பெண்களை இடிப்பதற்காகவே ஏறியதாக கூறியது சமூக வலைதளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நான்காவது சீசன்:
பிக்பாஸ் சீசன் 4ல் அனைவருடனும் சண்டை போட்ட நபர் என்றால் அது பாலாஜி தான். இவர் அடிக்கடி சனம் ஷெட்டியிடமே சண்டை போட்டு வந்துள்ளார். இவர் சனம் ஷெட்டியை டுபாக்கூர் என்று சொன்னது பேசுபொருளாக மாறியது. மேலும், சுரேஷ் சக்கரவர்த்திக்கும் சனமுக்கும் மிகப் பெரிய சண்டை வெடித்தது. அதில், சனம் ஷெட்டி, சுரேஷ் சக்கரவர்த்தியை மரியாதைக் குறைவாக பேசியதற்கு சோஷியல் மிடியாவில் அவருக்கு கண்டனங்கள் குவிந்தது.
ஐந்தாவது சீசன்:
பிக் பாஸ் 5 சீசனில் அபிநய் மற்றும் பாவனி இருவரும் காதலிப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இதை அடுத்த, வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த அமீர் வந்ததுமே, பாவனியை காதலிப்பாக கூறி வந்தார். அமீரும் பாவனியும் வீட்டில் இருந்தபோதே நெருக்கமாக இருந்தது பல கேள்விகளை எழுப்பியது. ஆனால் தற்போது அமீர் - பாவ்னி ஜோடிக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.
ஆறாவது சீசன்:
பிக் பாஸ் ஆறாவது சீசனில் வெற்றி பெற்ற அஸீமுக்கும், சக போட்டியாளர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் நிலவியது. வாக்குவாதத்தில் அஸீம், சக போட்டியாளர்கைள தரக் குறைவாகவும், மரியாதை இல்லாமலும், எவ்வளவு மட்டமாக பேச முடியுமோ அவ்வளவு மட்டமாக பேசி வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அசீம்மை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றுங்கள் எனற கோரிக்கையும் ஆரம்பம் முதலே வலுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.