Tamilaruvi Manian: “என்னய்யா பாட்டு எழுதுறீங்க? - வேற தொழில் பண்ணலாம்” - பாடலாசிரியர்களை கண்டித்த தமிழருவி மணியன்
பணத்திற்கு மரியாதையே கிடையாது. அது யோக்கியர்கள், அயோக்கியர்களிடமும் இருக்கும்.
படிக்காத பாமரனிடம் சென்று சேர்ந்து பாதிப்பை உண்டாக்கக்கூடிய ஆற்றல் மிக்க ஊடகம் உலகத்தில் உண்டு என்றால் அது சினிமா மட்டும் தான் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
பிரபலமான சித்த மருத்துவர் வீரபாபு, நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமாகியுளார். ரஜினியின் தீவிர ரசிகரான இவர் ‘முடக்கருத்தான்’ என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் பாடலாசியர்கள் புரியாத வார்த்தைகளில் பாடல் எழுதுவதை கண்டித்தார்.
அவர் பேசும் போது, “சினிமா மேல் எனக்கு மிகப்பெரும் ஈடுபாடு இருக்கு. அதனால் தான் கோபமாக வருது. எழுத்து படித்தவனை மட்டும் தான் பாதிக்கும். படிக்காத பாமரனிடம் சென்று சேர்ந்து பாதிப்பை உண்டாக்கக்கூடிய ஆற்றல் மிக்க ஊடகம் உலகத்தில் உண்டு என்றால் அது சினிமா மட்டும் தான். அதை முறையாக பயன்படுத்தி முதலமைச்சர் நாற்காலியில் வந்து அமர்ந்தவர் எம்ஜிஆர்.‘அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாதவர் திராவிடர் உடமையடா’ என்ற ஒரு பாட்டு தமிழ்நாடு முழுவதும் அவரை கொண்டு சேர்த்தது. கிராமம் வரை திமுகவை கொண்டு சேர்த்தது. இன்னைக்கு முக்கலும், முனகலுமாகதான் பாட்டு வருகிறது. இன்னைக்கு என்னைய்யா பாட்டு எழுதுறீங்க? - கண்ணதாசன் எழுதும்போது ஒரு பாட்டுக்கு அதிகபட்சம் வாங்கியது ரூ.5 ஆயிரம்தான். ஆனால் இன்றைக்கு எந்த கிறுக்கல்களுக்கு லட்சம் ரூபாய் தான் சம்பளம். என்ன பண்றீங்க?
உங்களுக்கு சமூக பொறுப்பு கிடையாதா? - இந்த சமூகம் சார்ந்த சிந்தனையே இல்லை என்றால் நீங்கள் எல்லாம் என்ன மனிதர்கள். எப்படியாவது பணம் சம்பாதிப்பது தான் வாழ்வின் மிகப்பெரிய நோக்கம் என்றால் இதை விட வேறு தொழில் செய்து நீங்கள் நன்றாக வாழுங்கள்.பணத்திற்கு மரியாதையே கிடையாது. அது யோக்கியர்கள், அயோக்கியர்களிடமும் இருக்கும். யோக்கியர்களிடம் மட்டும் தான் பணம் இருக்கும் என்றால் அது தொழுகைக்குரியது. ஆனால் அந்த பணம் எல்லா அயோக்கியர் கையிலும் இருக்கும்போது அதற்கு என்ன மரியாதை என கேட்கிறேன்?
ஒரு கட்டம் வரை தான் பணம். உன்னுடைய அடிப்படை தேவையை நிறைவேற்றிய பிறகு அது வெற்று காகிதம். அந்த காகிதத்தை என்ன செய்ய வேண்டும்? - எல்லா வசதிகளும் கிடைத்த பிறகு எந்த தேவையும் இல்லை என்றால் அதன் பிறகு அது காகிதம். அந்த காகிதம் மீண்டும் பணமாக வேண்டும் என்றால் இல்லாதவனுக்கு கொடுக்க வேண்டும். எனவே ஏழை, எளியவன், கல்வியறிவு இல்லாதவன், நோயாளிகளை தேடிச் சென்று உதவ வேண்டும்” என கூறினார்.