Ban Vijay Beast in Tamilnadu: பீஸ்ட் படத்தை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் - ஜவாஹிருல்லா முதல்வருக்கு கடிதம்..!
பீஸ்ட் படத்தை தமிழில் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பீஸ்ட் படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்த அரும்பாடுபட்டு வரும் தங்களின் உழைப்பை மனம் நெகிழ்ந்து பாராட்டுகின்றோம். வலதுசாரிகள் வடமாநிலங்களில் வளர்த்து வைத்துள்ள மதவாத மனப்பான்மையை தமிழகத்தில் அணுவளவும் நுழையவிடாமல் ஆற்றலோடு தங்களின் அரசு ஆற்றிவரும் பணிகளால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. அதேநேரம், அதை குலைப்பதற்காகவும், தங்களின் அரசியல் பிழைப்பிற்காகவும் மதவாத பாசிஸ்டுகள், அரசுக்கு பல்வேறு இடையூறுகளையும் சமூகத்தில் பல குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர் திரையுலகையும் இந்த தீயோரின் களமாக மாற்றும் முயற்சிகள் நெடுங்காலமாகவே நடந்து வருகின்றன.
இழிவுப்படுத்தும் நோக்கம்
விஸ்வரூபம், துப்பாக்கி உள்ளிட்ட பல திரைப்படங்கள் முஸ்லிம் சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டு பெரும் குழப்பங்களுக்கு வித்திட்டன. முஸ்லீம் சமுதாயமே பயங்கரவாத சமுதாயமாக மேற்கண்ட படங்களில் காட்டப்பட்டன. இடைக்காலத்தில் சிறிது நின்றிருந்த இந்த இழி செயலுக்கு தற்போது “பீஸ்ட்” என்ற படத்தின் மூலம் புத்துயிர் ஊட்டப்பட்டு உள்ளது.
தடை செய்ய வேண்டும்
குவைத் மற்றும் கத்தார் நாடுகளில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது. மனிதநேயப் பணிகளிலும், பேரிடர் கால மீட்புப் பணிகளிலும் தம் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் முன்னணியில் நிற்கும் முஸ்லீம் சமுதாயத்தை சிறுமைப் படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள பீஸ்ட் திரைப்படத்தை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க அமைதியின்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் பீஸ்ட் திரைப்படத்தை திரையிட தடை விதிப்பதோடு, வெறுப்பு அரசியலை தூண்டும் படங்களை யார் எடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பீஸ்ட்’. மால் ஹைஜாக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் உளவுத்துறை அதிகாரியாக வரும் விஜய், முஸ்லீம் தீவிரவாதி ஒருவரை பிடிக்க போராடுவது போன்று காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
View this post on Instagram